‘பார்க்கிங்’ கட்டணம் வசூலித்த பின் வாகனம் தொலைந்தால் ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


‘பார்க்கிங்’ கட்டணம் வசூலித்த பின் வாகனம் தொலைந்தால் ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 18 Nov 2019 3:00 AM IST (Updated: 18 Nov 2019 1:55 AM IST)
t-max-icont-min-icon

‘பார்க்கிங்’ கட்டணம் வசூலித்த பின் வாகனம் தொலைந்தால் ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு சென்ற ஒருவர், தனது காரை அங்கே நிறுத்திவிட்டு, அதற்கான ‘பார்க்கிங்’ கட்டணத்தையும் கொடுத்து ரசீது பெற்றார். ஓட்டலில் இருந்து திரும்பி வந்தபோது, அவரது கார் திருடு போயிருந்தது.

இது குறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் அவர் கேட்டபோது, திருட்டு போன காருக்கு தாங்கள் பொறுப்பு அல்ல என கூறினர். மேலும் அந்த ரசீதில், ‘வாகனம் தொலைந்தால் உரிமையாளரே பொறுப்பு’ என்ற விதி சேர்த்திருந்ததையும் அவர்கள் எடுத்துக்கூறினர். இதைத்தொடர்ந்து கார் உரிமையாளர் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த தீர்ப்பாயம், கார் உரிமையாளருக்கு ரூ.2.8 லட்சம் இழப்பீடு வழங்க ஓட்டல் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஓட்டல் நிர்வாகத்தினர் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.

இதை விசாரித்த நீதிபதிகள் சந்தானகவுடர், அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வு, நுகர்வோர் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. கட்டணம் பெற்று அல்லது தங்கள் ஊழியர்கள் பொறுப்பில் வாடிக்கையாளர்களின் வாகனத்தை நிறுத்திவிட்டு, உரிமையாளர் ‘பொறுப்பு’ என்ற விதியை பயன்படுத்த முடியாது என கூறிய நீதிபதிகள், ‘பார்க்கிங்’ கட்டணம் பெற்ற வாகனம் திருடப்பட்டால், அதற்கு ஓட்டல் நிர்வாகமே பொறுப்பு எனவும் தெரிவித்தனர்.

Next Story