அயோத்தி வழக்கு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் - பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்


அயோத்தி வழக்கு: முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் - பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 17 Nov 2019 9:30 PM GMT (Updated: 17 Nov 2019 9:20 PM GMT)

முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம், அயோத்தி வழக்கு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பா.ஜனதா, விசுவ இந்து பரிஷத் வலியுறுத்தி உள்ளன.

புதுடெல்லி,

அயோத்தி வழக்கு தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரும் மனு தாக்கல் செய்ய அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முடிவு செய்துள்ளது. ஆனால், அந்த முடிவை கைவிடுமாறு பா.ஜனதா வேண்டுகோள் விடுத்துள்ளது.

அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:-

அயோத்தி வழக்கு தீர்ப்பு வருவதற்கு முன்பு, இந்துக்கள், முஸ்லிம்கள் என 130 கோடி மக்களும், தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருந்தனர். தீர்ப்பு வெளியான பிறகு நான் முஸ்லிம் சமூகத்தில் பலரிடம் பேசினேன். இந்த தீர்ப்பு, மக்களிடையே இணக்கத்தையும், நாட்டையும் வலுப்படுத்தும் என்று அவர்கள் கூறினர்.

அதுபோல், முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியமும் அயோத்தி வழக்கு தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். அனைத்து முஸ்லிம்கள் சார்பில் செயல்பட வாரியத்துக்கு அதிகாரம் உள்ளதா? சீராய்வு மனு தாக்கல் செய்ய முடிவு எடுப்பதற்கு முன்பு, முஸ்லிம்களிடம் யோசனை கேட்டதா? இவ்வாறு அவர் கூறினார்.

விசுவ இந்து பரிஷத் பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குஜராத் மாநிலத்தில் இடிக்கப்பட்ட சோமநாதர் ஆலயத்தை மீண்டும் கட்ட மத்திய அரசு முடிவு செய்தபோது, அந்த முடிவை ஏற்றுக்கொள்ளுமாறும், இல்லாவிட்டால், கோவிலை இடித்தவர்கள் மீதுதான் முஸ்லிம்களுக்கு அபிமானம் இருப்பதாக தவறான செய்தி பரவி விடும் என்றும் மகாத்மா காந்தி முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பத்திரிகையிலும் அதே கருத்தை எழுதினார்.

அதுபோல், அயோத்தி வழக்கு தீர்ப்பையும் முஸ்லிம்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அந்த தீர்ப்பு ஏகமனதாக அளிக்கப்பட்டது. எனவே, அதை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்ய தேவையில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story