சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றார்


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றார்
x
தினத்தந்தி 17 Nov 2019 10:15 PM GMT (Updated: 17 Nov 2019 9:40 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் (வயது 65) நேற்று ஓய்வுபெற்றார். இதுவரை வடகிழக்கு மாநிலங்களில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்ற உயர்ந்த அந்தஸ்தை எட்டிப்பிடித்தவர் இவர் மட்டும்தான்.

1978-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்து கொண்ட இவர் 2001-ம் ஆண்டு அசாம் ஐகோர்ட்டு நீதிபதி ஆனார். 2010-ம் ஆண்டு பஞ்சாப், அரியானா ஐகோர்ட்டு நீதிபதியாக மாற்றப்பட்டார். 2011-ம் ஆண்டு அதன் தலைமை நீதிபதி ஆனார். 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 3-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்ற ரஞ்சன் கோகாய், 13 மாதங்கள் அந்தப் பதவியை வகித்துள்ளார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டு வந்த 2.77 ஏக்கர் நில உரிமை தொடர்பான விவகாரம் மிக நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்த நிலையில், அந்த வழக்கில் இவரது தலைமையிலான அமர்வு கடந்த 9-ந் தேதி தீர்ப்பு அளித்தது.

அந்த நிலத்தை ராம்லல்லாவுக்கு (குழந்தை ராமர்) வழங்க உத்தரவிட்டதுடன் அங்கு ராமர் கோவில் கட்டவும் அனுமதி அளித்தது. முஸ்லிம்களுக்கு 5 ஏக்கர் நிலம் ஒதுக்கவும் உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்காக ரஞ்சன் கோகாய் வரலாற்றில் இடம் பெறுவார்.

அதே நேரத்தில் செக்ஸ் புகாருக்கு ஆளாகி சர்ச்சையை ஏற்படுத்திய சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்ற பெயரையும் ரஞ்சன் கோகாய் பெற்று விட்டார்.

ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே இன்று(திங்கட் கிழமை) பதவி ஏற்கிறார்.


Next Story