சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றார்


சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே பதவி ஏற்றார்
x
தினத்தந்தி 18 Nov 2019 4:35 AM GMT (Updated: 18 Nov 2019 7:31 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நேற்று பதவி ஏற்றார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார்.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகாய் நேற்று முன்தினம் ஓய்வுபெற்றார். அடுத்த தலைமை நீதிபதியாக சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி எஸ்.ஏ.போப்டே ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.

ஜனாதிபதி மாளிகையில் சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.போப்டே நேற்று காலை பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்துவைத்தார். போப்டே ஆங்கிலத்தில் கடவுள் பெயரில் உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவி ஏற்பு விழாவை காண போப்டேவின் தாயார் ஜனாதிபதி மாளிகைக்கு ஸ்டிரெச்சரில் அழைத்துவரப்பட்டு இருந்தார். பதவி ஏற்றுக்கொண்டதும் போப்டே தாயாரின் காலை தொட்டு வணங்கினார்.

இந்த பதவி ஏற்பு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, பல மூத்த மத்திய மந்திரிகள், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், ஆர்.எம்.லோதா, டி.எஸ்.தாகுர், ஜே.எஸ்.கேஹர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதுவரை இல்லாத நிகழ்வாக ஜமைக்கா தலைமை நீதிபதி பிரயான் சைக்ஸ், பூடான் சுப்ரீம் கோர்ட்டின் மூத்த நீதிபதி குயன்லாய் ஷெரிங் ஆகியோரும் விருந்தினர்களாக மேடையில் எஸ்.ஏ.போப்டேவுடன் அமர்ந்திருந்தனர். நிகழ்ச்சிக்கு அவரது குடும்பத்தினர், நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். பதவி ஏற்ற பின்னர் அவருக்கு மூத்த வக்கீல்கள், வக்கீல் சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு மத்திய மந்திரிகள் உள்ளிட்ட பல தலைவர்கள் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சரத் அரவிந்த் போப்டே (எஸ்.ஏ.போப்டே) மராட்டிய மாநிலம் நாக்பூரில் 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி வக்கீல் குடும்பத்தில் பிறந்தவர். அவருக்கு வயது 63. இவரது தந்தை பிரபல மூத்த வக்கீல் அரவிந்த் சீனிவாஸ் போப்டே. நாக்பூர் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் எல்.எல்.பி. பட்டம் பெற்றார்.

1978-ம் ஆண்டு மராட்டிய பார் கவுன்சிலில் வக்கீலாக பதிவு செய்துகொண்டார். மும்பை ஐகோர்ட்டில் நாக்பூர் அமர்வில் வக்கீலாக பணிபுரிந்தார். 1998-ம் ஆண்டு மூத்த வக்கீலாக பதவி உயர்வு பெற்றார். 2000-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அவர் மும்பை ஐகோர்ட்டின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

பின்னர் 2012-ம் ஆண்டு அக்டோபர் 16-ந் தேதி மத்தியபிரதேச ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் 12-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். எஸ்.ஏ.போப்டே 17 மாதங்கள் தலைமை நீதிபதியாக பதவி வகிப்பார். 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந் தேதி அவர் ஓய்வுபெறுவார்.

சமீபத்தில் நீண்டகாலமாக இருந்து வந்த சர்ச்சைக்குரிய அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வில் எஸ்.ஏ. போப்டேவும் ஒருவர். இவர் அடங்கிய 9 நீதிபதிகள் அமர்வு, தனிநபர்களின் அடையாளங்களை பாதுகாப்பது இந்திய அரசியல்சாசனத்தின் அடிப்படை உரிமை என்று 2017-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது.

ஆதார் கார்டு இல்லை என்பதற்காக ஒருவருக்கு எந்த அரசியல் சலுகையையும் மறுக்கக்கூடாது என்று தீர்ப்பு வழங்கிய அமர்விலும் இவர் இடம்பெற்று இருந்தார்.

அதேபோல முந்தைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் பெண் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டு கூறியபோது விசாரணை நடத்திய 3 நீதிபதிகள் குழு, இதில் ரஞ்சன் கோகாய்க்கு எந்த தொடர்பும் இல்லை என்று அறிவித்தது. இந்த குழுவிலும் எஸ்.ஏ.போப்டே இடம்பெற்றிருந்தார்.


Next Story