பரூக் அப்துல்லா எங்கே? பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி


பரூக் அப்துல்லா எங்கே? பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி
x

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று கூடியதும், பரூக் அப்துல்லாவை விடுவிக்க வேண்டும் எனக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

புதுடெல்லி,

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் இன்று காலை 11 மணிக்கு  கூடியது.  பாராளுமன்றம் கூடியதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. தேசிய கீதம் நிறைவு பெற்றதுடன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை நோக்கி கேள்வி எழுப்பிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி, “ மாநிலங்களவை எம்.பி. பரூக் அப்துல்லா இங்கு இல்லை” என்றார். 

உடனடியாக குறுக்கிட்ட சபாநாயகர், முதலில் புதிய உறுப்பினர்கள் பதவியேற்கட்டும் என்றார். ஆனால், சபாநாயகரின் கோரிக்கையை ஏற்க மறுத்த  திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து, ”பரூக் அப்துல்லாவை விடுவியுங்கள்” என்று கோஷம் எழுப்பிக்கொண்டே இருந்தனர். 

உறுப்பினர்களின் கோஷத்துக்கு மத்தியில் பேசிய சபாநாயகர், “ அனைத்து விஷயங்கள் குறித்து விவாதம் நடத்த அனுமதிக்க நான் தயாராக இருக்கிறேன். இந்த அவை, கோஷம் எழுப்புவதற்கானது இல்லை, விவாதங்களுக்கும் ஆலோசனைகளுக்குமான இடமாகும்” என்று கூறியதோடு,  உறுப்பினர்களை சமாதானப்படுத்த முயற்சித்தார். 

இதையடுத்து,  காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, காஷ்மீருக்கு ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு செல்ல அனுமதித்தது குறித்து மத்திய அரசை கடுமையாக சாடினார்.  இதற்கு மத்தியில், பரூக் அப்துல்லாவை விடுதலை செய்வது குறித்து, ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்தார். 

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து,  அம்மாநில முன்னாள் முதல் மந்திரியும், மக்களவை எம்.பியுமான பரூக் அப்துல்லா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு  வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

Next Story