காற்றுமாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? - கம்பீர் விளக்கம்


காற்றுமாசு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? - கம்பீர் விளக்கம்
x
தினத்தந்தி 18 Nov 2019 11:21 AM GMT (Updated: 18 Nov 2019 11:21 AM GMT)

டெல்லியில் நடைபெற்ற காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து கவுதம் கம்பீர் விளக்கமளித்துள்ளார்.

புதுடெல்லி,

புதுடெல்லியில் கடந்த 15-ம் தேதி காற்றுமாசு குறித்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. முக்கிய அதிகாரிகள் மற்றும் எம்.பி.க்கள் உட்பட மொத்தம் 29 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் வெறும் 4 பேர் மட்டுமே இதில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக, இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கிழக்கு டெல்லியின் பா.ஜ.க எம்.பி. கவுதம் கம்பீருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் அவர், இந்தியா-வங்காளதேசம் இடையே மத்திய பிரதேசத்தின் இந்தூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு வர்ணனையாளராக சென்று விட்டார். 

கவுதம் கம்பீரின் இந்த செயல் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. மேலும் காற்றுமாசு பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில் கவுதம் கம்பீரை காணவில்லை என்று டெல்லியில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காற்று மாசு குறித்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை என அதில் எழுதப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, தான் கிரிக்கெட் வர்ணனைக்கு சென்றதற்கான காரணம் குறித்து கம்பீர் கூறியதாவது, 

“காற்று மாசு குறித்த கூட்டம் மிகவும் முக்கியமானது என்பது எனக்கு தெரியும். ஆனால் கடந்த ஜனவரி மாதமே இந்த போட்டிக்கு வர்ணனை செய்வதற்காக ஒப்பந்தமாகி விட்டேன். மேலும் நான் அரசியலில் இணைந்தது ஏப்ரல் மாதத்தில் தான். ஒப்பந்தத்தை மீற முடியாது என்பதால் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள முடியாது என்பதையும் நான் முன்பே தெரியப்படுத்தி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

Next Story