7 வயது சிறுவனை கடத்தி ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவன்
7 வயது சிறுவனை கடத்தி அவனது தந்தையிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய 10-ம் வகுப்பு மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஐதராபாத்,
ஐதராபாத் அருகே 7 வயது சிறுவனை 10-ம் வகுப்பு மாணவன் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் தந்தையிடம் ரூ.3 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவனை போலீசார் கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் மீர்பேட் பகுதியில் உள்ள பிஎஸ்ஆர் காலனியில் அர்ஜுன் என்ற 7 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீர் என்று மாயமானான்.
பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் சிறுவனை காணவில்லை. இந்த நிலையில், சிறுவனின் தந்தையை, மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு, ரூ.3 லட்சம் கொடுத்தால் சிறுவனை விட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.
அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை, போலீசில் புகார் அளித்தார். போன் எண்ணை கொண்டு விசாரணையை துரிதப்படுத்திய போலீசார், 3 மணி நேரத்தில் சிறுவனை மீட்டு, கடத்தியவரையும் கைது செய்தனர். விசாரணையில், கடத்தியவர் 10ம் வகுப்பு மாணவன் என்றும், பணத்திற்காக கடத்தியதாகவும் தெரிய வந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
10-ம் வகுப்பு மாணவன் தனது வகுப்பிலிருந்து திரும்பி கொண்டு இருந்தார். அவர் அர்ஜுனை பார்த்தார். அவரைக் கடத்தி, பின்னர் அவரது குடும்பத்தினரிடம் பணம் பறிக்க திட்டமிட்டு உள்ளார்.
அர்ஜுனுடன் நட்பாக பேசி, அல்மாஸ்குடாவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் அழைத்துச் சென்று அவரை ஒரு கோவிலுக்குள் அமரவைத்து விட்டு அவரது தந்தைக்கு போன் செய்து மிரட்டி உள்ளார் 10-ம் வகுப்பு மாணவன்.
அர்ஜுனின் தந்தை ராஜுவிடம் பேசுகையில், 10 ஆம் வகுப்பு மாணவன் தனது குரலை மாற்றி பேசி உள்ளார். போலீசாரை அணுக வேண்டாம் என்று ராஜுவை எச்சரித்து உள்ளார். அவ்வாறு செய்தால், அவரது மகன் கொல்லப்படுவார் என்றும் மிரட்டி உள்ளார்.
10ம் வகுப்பு மாணவன் 'மைனர்' என்பதால் சிறார் நீதி வாரியத்தை அணுக உள்ளோம். குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அவரை கைது செய்து உள்ளோம் என கூறினார்கள்.
Related Tags :
Next Story