2 நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்: சபரிமலையில் ஒரே நாளில் ரூ.3¼ கோடி வருமானம் - கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம்


2 நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்: சபரிமலையில் ஒரே நாளில் ரூ.3¼ கோடி வருமானம் - கடந்த ஆண்டை விட ரூ.1 கோடி அதிகம்
x
தினத்தந்தி 18 Nov 2019 10:05 PM GMT (Updated: 18 Nov 2019 10:05 PM GMT)

சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 2 நாட்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் ஒரே நாளில் ரூ.3¼ கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1¼ கோடி அதிகமாகும்.

சபரிமலை,

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 16-ந் தேதி திறக்கப்பட்டது. அன்றைய தினம் மற்ற பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. மறுநாள் முதல் கோவிலில் நடை திறக்கப்பட்டு தரிசனத்துக்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்களின் வருகை கடந்த வருடத்தை விட அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் வாசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதனையடுத்து கடந்த சீசனில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து கோவிலுக்கு வரும் பக்தர்களின் வருகை குறைந்தது.

இதனால் கடந்த ஆண்டு மட்டும் சபரிமலை கோவிலில் ரூ.100 கோடி வருமானம் குறைந்தது. இந்த நிலையில் தற்போது கடந்த வருடத்தை போன்று சபரிமலையில் நெருக்கடியான சூழல் எதுவும் இல்லை. கடந்த 2 நாட்களில் மட்டும் 1 லட்சம் பக்தர்கள் வரை அய்யப்பனை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களின் வருகை அதிகரிப்பால் வருமானமும் உயர்ந்துள்ளது. அதாவது, ஒரே நாளில் ரூ.3 கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.1¼ கோடி அதிகமாகும்.

நடப்பு சீசனில் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிலுக்கு வருமானமும் கணிசமாக கிடைக்கும் என்று நம்புகிறோம். கோவிலில் 25 லட்சம் டின் அரவணை இருப்பில் உள்ளது. நிலக்கல் வரை மட்டுமே பக்தர்களின் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. இதனை பம்பை வரை நீட்டிக்க அனுமதிக்க வேண்டும் என்பது தொடர்பாக கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்ய உள்ளோம். நேற்றைய தினம் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திராவை சேர்ந்த ஒரு பெண் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story