டெல்லியில் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு


டெல்லியில் போராடி வரும் பல்கலைக்கழக மாணவர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணி - போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Nov 2019 10:11 PM GMT (Updated: 18 Nov 2019 10:11 PM GMT)

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான விடுதி கட்டணம் சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதை எதிர்த்து மாணவர்கள் கடந்த 3 வாரங்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

கடந்த வாரம் நடைபெற்ற எழுச்சி போராட்டத்தால் கட்டணத்தொகை பெருமளவு குறைக்கப்பட்டது. ஆனாலும், கட்டண உயர்வை முற்றிலும் திரும்பப்பெற வலியுறுத்தியும், மேலும் சில கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டம், மாணவர்களின் போராட்டம் இவற்றை கருத்தில் கொண்டு பல்கலைக்கழக பகுதி, நாடாளுமன்ற சுற்றுப்பகுதிகளில் போலீசார் 144 தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர்.

எனினும் நாடாளுமன்றத்தில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ள சப்தர்ஜங் பகுதியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் ஒன்று திரண்டு நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்றனர். ஆனால் சுமார் 600 மீ. தூரத்திலேயே போலீசார் சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து மாணவர்களை தடுத்தனர்.

ஆனால் போலீசாரின் தடுப்புகளை மீறி மாணவர்கள் முன்னேற முயன்றனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. உடனே மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். மேலும் மாணவர் சங்க தலைவர் ஐஷ் கோஷ் உள்பட சுமார் 100 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வலியுறுத்தி சப்தர்ஜங் பகுதியில் அமர்ந்து பிற மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மாணவர்களின் இந்த போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த போராட்டம் மற்றும் பேரணியால் நாடாளுமன்றம் அருகே உள்ள சென்டிரல் செகரட்டரியேட், பட்டேல் சவுக், உத்யோக் பவன் ஆகிய மெட்ரோ ரெயில் நிலையங்கள் 4 மணி நேரத்துக்கும் மேலாக மூடப்பட்டன. போராடிய மாணவர்களை போலீசார் முழுமையாக கட்டுப்படுத்திய பிறகு மாலை 6 மணி அளவில் ரெயில் நிலையங்கள் திறக்கப்பட்டன.

போராட்டம் காரணமாக சப்தர்ஜங் பகுதியில் போக்குவரத்து தடை பட்டதாலும், மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டதாலும் டெல்லியில் பல இடங்களில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போராட்டத்தையொட்டி பல்வேறு பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேரு பல்கலைக்கழகத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி போராட்டம் நடந்து வருவதால், அங்கு அமைதியான சூழலை ஏற்படுத்துவது குறித்து பரிந்துரைகளை வழங்க 3 பேர் குழு அமைக்கப்பட்டு உள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.


Next Story