மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது? குழப்பத்தில் அரசியல் கட்சிகள்


மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது? குழப்பத்தில் அரசியல் கட்சிகள்
x
தினத்தந்தி 19 Nov 2019 5:45 AM GMT (Updated: 19 Nov 2019 5:45 AM GMT)

மராட்டிய மாநில அரசியலில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. தேசியவாத காங்கிரஸ், சிவசேனா என அனைத்தும் மக்களை குழப்பி வருகின்றன.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றன. ஆனால் முதல்-மந்திரி பதவியில் சிவசேனா பங்கு கேட்டதாலும், அதற்கு பாரதீய ஜனதா மறுத்ததாலும் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து, எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால், கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடனான மோதலை தொடர்ந்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமலான பிறகு அந்த முயற்சியில் சிவசேனா தீவிரம் காட்டியது. இந்துத்வா கொள்கை கொண்ட சிவசேனாவுடன் கைகோர்க்க முதலில் தயங்கிய காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள், பின்னர் ஆட்சி அமைக்க சம்மதித்தன. இதற்காக மூன்று கட்சி தலைவர்களும் நேரில் சந்தித்து பேசி கூட்டணி அரசில் செயல்படுத்த வேண்டிய குறைந்தபட்ச செயல் திட்டத்தை வகுத்தனர். அது இறுதி கட்டத்தை நெருங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. 

இந்த நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளான நேற்று,  கூட்டத்தொடரில் பங்கேற்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வருகை தந்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அவரிடம், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக சிவசேனா கூறி வருகிறது, அது எவ்வாறு செல்கிறது? என்று கேட்டனர். அதற்கு சரத் பவார் ஆச்சரியம் தெரிவிக்கும் வகையில், அப்படியா... பேச்சு நடத்துகிறார்களா? எனக் கேட்டுள்ளார்

கூட்டணி மாற்றம் தினம் ஒரு திருப்பமாக  நடந்து கொண்டிருக்கின்ற நிலையில், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சோனியா காந்தியை நேற்று சந்தித்து மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது, மராட்டியத்தில் அரசு அமைப்பது குறித்து  எதுவும் பேசப்படவில்லை. இந்த சந்திப்பு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் குறித்து விவாதிப்பதாக இருந்தது என்று கூறினார். 

இதை தொடர்ந்து, டெல்லியில் உள்ள சரத்பவாரின் இல்லத்தில் அவரை, சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் சந்தித்து பேசினார்.

இந்த நிலையில்  சஞ்சய் ராவத் எம்பி  கூறும் போது, அரசாங்கத்தை அமைப்பதற்கான பொறுப்பு எங்களுடையது அல்ல, அந்த பொறுப்பைக் கொண்டிருந்தவர்கள் ஓடிவிட்டனர். ஆனால் விரைவில் எங்களுக்கு ஒரு அரசாங்கம் அமையும் என்று நான் நம்புகிறேன்" என்று கூறினார்.

இதற்கிடையில், மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான அமித் ஷா, 'சிவசேனாவுடன் மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்' என்றும், 'எல்லாம் சரியாகிவிடும்' என்றும் தனக்கு உறுதியளித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே  தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே  இன்று கூறியதாவது:-

நான் ஒரு சமரசம் பற்றி சிவசேனா எம்பி சஞ்சய் ராவத்துடன் பேசினேன். நான் அவரிடம், 3 ஆண்டுகள் (பாஜகவைச் சேர்ந்த முதல்வர்) மற்றும் 2 ஆண்டுகள் (சிவசேனாவிலிருந்து முதல்வர்) என்ற சூத்திரத்தை பரிந்துரைத்தேன். அதற்கு அவர், பாஜக ஒப்புக்கொண்டால் சிவசேனா அதைப் பற்றி சிந்திக்க முடியும் என்று கூறினார். இது குறித்து பாஜகவுடன் கலந்துரையாடுவேன் என ராம்தாஸ் அத்வாலே கூறினார்.

Next Story