கர்நாடக எம்.எல்.ஏ. தாக்குதல் சம்பவம்; பாதுகாவலர் பணியிடை நீக்கம்


கர்நாடக எம்.எல்.ஏ. தாக்குதல் சம்பவம்; பாதுகாவலர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 19 Nov 2019 7:19 AM GMT (Updated: 19 Nov 2019 7:19 AM GMT)

கர்நாடகாவில் எம்.எல்.ஏ. தாக்குதல் சம்பவத்தில் பாதுகாவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

மைசூரு,

கர்நாடகாவின் மைசூரு நகரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. தன்வீர் சைத் கடந்த ஞாயிற்று கிழமை சென்றுள்ளார்.  அவர் அருகே சென்ற நபர் ஒருவர் திடீரென சைத்தின் கழுத்தில் கத்தியால் குத்தினார்.

இதன்பின் அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற அந்நபரை சைத்தின் ஆதரவாளர்கள் மற்றும் சுற்றியிருந்தவர்கள் உடனடியாக பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதன்பின்பு சைத் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  எனினும் தொடர்ந்து சிக்கலான நிலையிலேயே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.  பின்னர் அவர் உடல்நலமுடன் இருக்கிறார் என மருத்துவமனை வட்டாரம் தகவல் தெரிவித்தது.  சித்தராமையா தலைமையிலான முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மந்திரியாக பதவி வகித்தவர் சைத் ஆவார்.

எம்.எல்.ஏ. மீது தாக்குதல் நடத்திய நபர், மைசூரு நகரை சேர்ந்த பர்ஹான் பாஷா (வயது 24) என விசாரணையில் தெரிய வந்துள்ளது.  கைவினை கலைஞரான அவர் எதற்காக இந்த செயலில் ஈடுபட்டார் என தெரியவில்லை.

இந்த தாக்குதலின்பொழுது, எம்.எல்.ஏ.வின் பாதுகாவலரான பைரோஸ் கான் உடன் இருந்து உள்ளார்.  ஆனால் சம்பவம் நடந்தபொழுது, அதனை தடுக்காமல் பணியில் கவன குறைவுடன் செயல்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டின் கீழ் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.

Next Story