எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்?


எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம்?
x
தினத்தந்தி 19 Nov 2019 1:00 PM IST (Updated: 20 Nov 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

எதிர்ப்பு கிளம்பியதால் மாநிலங்களவை காவலர்களுக்கு ராணுவ பாணி சீருடையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி,

நாடாளுமன்ற மாநிலங்களவையில் காவலர்கள் வழக்கமாக பாரம்பரிய குர்தா மற்றும் தலைப்பாகை அணிந்து காணப்படுவார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென அவர்கள் சீருடை மாற்றப்பட்டு, ராணுவ அதிகாரிகள் பாணி சீருடை அணிந்து சபையில் காணப்பட்டனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இதில் அதிருப்தி அடைந்து பிரச்சினை கிளப்பினார். “ ஐயா... சபை காவலர்கள்..” என ஆரம்பித்தார். அப்போது சபை தலைவர் வெங்கையா நாயுடு குறுக்கிட்டார்.

ஆனாலும் ஜெய்ராம் ரமேஷ் தொடர்ந்து, “ சபை காவலர்களின் உடையில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றம் செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

அதற்கு வெங்கையா நாயுடு அவரிடம், “ சரி, நீங்கள் எப்போதும் குறிப்பிடத்தகுந்த விஷயத்தை, குறிப்பிடத்தகாத நேரத்தில் சொல்கிறீர்கள்” என்றார்.

இந்த சீருடை சட்ட விரோதமானது என முன்னாள் ராணுவ அதிகாரிகள் சிலரும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், இந்த சீருடையை மறுஆய்வு செய்யுமாறு மாநிலங்களவை செயலகத்திடம் சொல்வது என தீர்மானித்து உள்ளேன் என மாநிலங்களவையில் சபைத்தலைவர் வெங்கையா நாயுடு நேற்று அறிவித்தார்.

எனவே சபை காவலர்களின் ராணுவ பாணி சீருடையில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story