மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை


மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை
x
தினத்தந்தி 19 Nov 2019 3:03 PM IST (Updated: 19 Nov 2019 3:03 PM IST)
t-max-icont-min-icon

மராட்டிய அரசியல் நிலவரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி,

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு நடந்த தேர்தலுக்கு பின்னர் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதை அடுத்து, கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. முதல்-மந்திரி பதவி கேட்டு பாரதீய ஜனதாவிடம் உறவை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனாவுடன் கைகோர்ப்பதற்கு முதலில் தயங்கிய இரு கட்சிகளும் பின்னர் சம்மதித்தன. ஆட்சி அமைப்பதற்காக 3 கட்சிகளின் தலைவர்களும் நேரில் சந்தித்து பேசினர்.

3 கட்சிகளின் ஆட்சி அமைக்கும் நகர்வுகள் இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இதுதொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சரத்பவார் சந்தித்து பேசினார். அப்போது பேட்டி அளித்த சரத் பவார், மராட்டியத்தில் உள்ள தற்போதைய அரசியல் சூழல் குறித்து சோனியா காந்தியிடம் விளக்கினேன். ஆனால் சிவசேனாவுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக எதுவும் பேசவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து பேசுவோம்” என்றார்.  சரத்பவாரின் இந்த கருத்தால் மராட்டிய அரசியலில் மீண்டும் குழப்படியான சூழல் உண்டானது. இதனால் மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து தாமதமும், குழப்பமான சூழலும் நீடிக்கிறது.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில்,  காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் மூத்த தலைவர்களான அகமது படேல், ஏ.கே. அந்தோணி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரை சந்தித்து பேசினார். சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, மராட்டிய அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

Next Story