இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளது; மக்களவையில் பாஜக எம்.பி. குற்றச்சாட்டு
இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக மக்களவையில் பாஜக எம்.பி. தெரிவித்தார்.
புதுடெல்லி,
அருணாச்சல பிரதேச மாநிலம் மீது உரிமை கொண்டாடும் சீனா, அருணாச்சல பிரதேசத்தின் எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளுக்குள் அத்துமீறி நுழையும் சம்பவம் எப்போதாவது நடைபெற்று வருகிறது. பின்னர் இந்தியாவின் கடும் எதிர்ப்பையடுத்து பின்வாங்கி செல்கிறது.
இந்த சூழலில், இன்று மக்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் பேசிய, அருணாச்சல பிரதேச கிழக்கு தொகுதி பா.ஜ.க. எம்.பி.யான தபிர் கோவா, இந்திய பிராந்தியத்திற்குட்பட்ட பகுதிகளில் 50 முதல் 60 கி.மீட்டர் வரையிலான இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது என்று குற்றம் சாட்டினார். டோக்லாம் பகுதியில் ஏற்பட்ட மோதலை போன்று வரும் காலத்தில் அருணாச்சல பிரதேசத்திலும் ஏற்படும். எனவே, மத்திய அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், அருணாச்சல பிரதேசத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சென்ற போது சீனா ஆட்சேபம் தெரிவித்ததையும் தனது பேச்சின் போது தபிர் கோவா சுட்டிக்காட்டினார்.
டோக்லாம் பிரச்சினை என்ன?
சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகளின் முச்சந்திப்பில் டோக்லாம் என்னும் பகுதி உள்ளது. இங்கு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம் சீன ராணுவம் சாலை அமைக்கும் நடவடிக்கையில் இறங்கியது. இதை இந்திய ராணுவம் தடுத்தது. இதனால் ஏற்பட்ட மோதல் காரணமாக இந்தியாவும், சீனாவும் இங்கு படைகளை குவித்தன. இரு நாடுகளும் படைகளை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையை வைத்தன. இந்த நிலையில் இரு தரப்பிலும் படைகள் விலக்கிக் கொள்ளப்படவில்லை. இதனால் இப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வந்தது.
இதைத்தொடர்ந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் டோக்லாம் பகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை குறித்து தூதரக ரீதியாக சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இரு தரப்பிலும் தங்களுடைய கண்ணோட்டம், கவலைகள், நலன்கள் முன்வைக்கப்பட்டன. அதன் அடிப்படையில், டோக்லாமில் இரு நாடுகளும் 90 நாட்களுக்கு பிறகு தங்கள் நாட்டு படைகளை திரும்ப பெற்றன.
Related Tags :
Next Story