இந்தூரில் ருசிகரம்: நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி


இந்தூரில் ருசிகரம்: நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் எம்.பி.ஏ. மாணவி
x
தினத்தந்தி 19 Nov 2019 12:34 PM GMT (Updated: 19 Nov 2019 7:40 PM GMT)

மத்திய பிரதேசத்தில் எம்பிஏ படிக்கும் ஒரு மாணவி தனது அழகான நடனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

இந்தூர்,

மத்திய பிரதேச மாநிலம், பினா நகரை சேர்ந்தவர் சுபி ஜெயின் (வயது 23). இவர், மராட்டிய மாநிலம், புனேயில் எம்.பி.ஏ. படித்து வரும் மாணவி ஆவார்.

இந்த நிலையில், இவர் 15 நாள் கல்விசார் பயிற்சிக்காக (இன்டர்ன்ஷிப்), மத்திய பிரதேச மாநிலம், இந்தூருக்கு சென்றுள்ளார்.

அங்கு அவர் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை தன்னார்வ தொண்டர்கள் மிகுந்த ஆர்வத்துடன் ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தார்.

அதைத் தொடர்ந்து அவர் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நெரிசல் நேரத்தில், ரீகல் சவ்ரஹா, ஐகோர்ட்டு, இந்திரபிரஸ்தா, எம்.ஜி. ரோடு உள்ளிட்ட இடங்களில் நடனமாடி போக்குவரத்தை ஒழுங்குபடுத்த தொடங்கினார்.

நடன அசைவுகள் மூலமே இரு சக்கர வாகன ஓட்டிகளை ஹெல்மட் அணிய சொல்கிறார். கார் ஓட்டுகிறவர்களை சீட் பெல்ட் அணியுமாறு கூறுகிறார். இது வாகன ஓட்டிகளின் கவனத்தை கவர்வதாக அமைந்துள்ளது. இவர் நடன அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்தவர்கள் செல்போனில் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் வெளியிட அது தீவிரமாக பரவ தொடங்கியது.

இது குறித்து சுபி ஜெயின் கூறும்போது, “இதற்கு முன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய முன் அனுபவம் எனக்கு இல்லை. இந்த நகரத்தில் இளம் தன்னார்வ தொண்டர்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதைப் பார்த்துதான் நான் நடன அசைவுகளால் ஒழுங்குபடுத்த ஆரம்பித்தேன். இதற்கு எனக்கு முன்னோடி, மைக்கேல் ஜாக்சன் நடன அசைவுகளைக் கொண்டு போக்குவரத்தை ஒழுங்குபடுத்திய போக்குவரத்து போலீஸ்காரர் ரஞ்சித் சிங்தான்” என்றார்.

தன் நடன அசைவுகளால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துகிற சுபி ஜெயினை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. வருண் கபூர் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் பாராட்டினர்.


Next Story