சபரிமலையில் தரிசனத்துக்கு 319 பெண்கள் முன்பதிவு - திருப்பி அனுப்ப கேரள போலீசார் முடிவு


சபரிமலையில் தரிசனத்துக்கு 319 பெண்கள் முன்பதிவு - திருப்பி அனுப்ப கேரள போலீசார் முடிவு
x
தினத்தந்தி 19 Nov 2019 9:45 PM GMT (Updated: 19 Nov 2019 9:08 PM GMT)

சபரிமலையில் தரிசனத்துக்கு 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். அவர்கள் வந்தால் திருப்பி அனுப்ப கேரள போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கடந்த 16-ந் தேதி நடை திறக்கப்பட்டது. நடை திறந்த முதல்நாளே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதற்கிடையே 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் குழுவாக இணைந்து சபரிமலை வர உள்ளதாகவும், பாதுகாப்பு தர வேண்டும் என்றும் பெண்கள் அமைப்புகள் விடுத்த கோரிக்கையை தேவசம் போர்டு மந்திரி ஏற்க மறுத்து விட்டார். மேலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் கூறும்போது, கோவிலின் ஐதீகம் பற்றி கூறியதும், இளம்பெண்கள் பலர் அவர்களாகவே திரும்பி சென்று விடுகிறார்கள். மற்றவர்களை நாங்கள் நிலக்கல் பகுதியிலேயே தடுத்து நிறுத்தி விடுகிறோம். முதல் நாளில் 10 பெண்களும், நேற்று முன்தினம் ஆந்திராவைச் சேர்ந்த 2 பெண்களும் திருப்பி அனுப்பப்பட்டனர் என்றனர்.

சபரிமலைக்கு வரும் பெண்கள் அனைவரும் அவர்களின் வயது சான்று மற்றும் ஆதார் நகல்களை கொண்டு வர வேண்டும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்வோரும் இந்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இந்த ஆண்டு சபரிமலை செல்ல சுமார் 8 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களில் பெண்களின் எண்ணிக்கையையும், அவர்களின் வயது விவரமும் கடுமையாக பரிசோதிக்கப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி 319 இளம்பெண்கள் சபரிமலை செல்ல ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்துள்ளனர். இவர்களில் தமிழகத்தில் இருந்து 139 பேரும், ஆந்திரா 160, கர்நாடகா 9, தெலுங்கானா 8, ஒடிசாவில் இருந்து 3 பேரும் முன்பதிவு செய்திருக்கிறார்கள். இதனை தெரிவித்த தேவஸ்தான அதிகாரிகள் கேரளாவில் இருந்து இளம்பெண்கள் யாரும் முன்பதிவு செய்யவில்லை என்பதையும் தெரிவித்தனர்.

மேலும் மண்டல பூஜை, மகர விளக்கு விழா காலங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருப்பதையே போலீசாரும், அரசும் விரும்புகிறது. இதனால் கோவிலுக்கு இளம்பெண்கள் யாராவது வந்தால் அவர்களை போலீசார் தடுத்து உரிய அறிவுரை கூறி திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

தமிழக சிறுமியை திருப்பி அனுப்பிய போலீசார்

* நேற்று காலை சபரிமலையில் சாமி தரிசனம் செய்ய தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். பம்பையில் அந்த சிறுமியை சோதனை செய்த போது சிறுமிக்கு 12 வயது என்பது தெரிய வந்தது. 10 வயதுக்கு மேல் உள்ள சிறுமிகளை தரிசனத்துக்கு அனுமதிப்பது இல்லை என்பது கோவிலின் ஐதீகம். எனவே அந்த சிறுமியை தரிசனத்துக்கு போலீசார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தந்தை மட்டும் சாமி தரிசனம் செய்தார். அதன்பிறகு அவர் சிறுமியை அழைத்து கொண்டு ஊருக்கு வந்தார்.

* சபரிமலைக்கு அய்யப்பனை தரிசனம் செய்ய 9 வயது சிறுமி ஒருவர் தனது தந்தையுடன் வந்தார். அப்போது அவர், தனது கழுத்தில் அட்டை ஒன்றை கட்டி தொங்கவிட்டு இருந்தார். அதில், ‘இப்போது எனக்கு வயது 9. இனி நான் எனது 50 வயதில் தான் அய்யப்பனை தரிசனம் செய்ய வருவேன். அதற்கு முன்பாக கோவில் ஐதீகத்தை நான் மீற மாட்டேன்’ என்று எழுதி இருந்தது. இதைக்கண்ட அய்யப்ப பக்தர்கள் அந்த சிறுமியை பாராட்டினர்.



Next Story