டெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்


டெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
x
தினத்தந்தி 20 Nov 2019 7:16 AM IST (Updated: 20 Nov 2019 7:16 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நேற்று காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே நேற்று டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு இருந்தது. பல நாட்களுக்குப் பிறகு காற்று சுத்தமாக இருப்பதாக டெல்லி மக்கள் சற்று நிம்மதியடைந்தனர்.

இந்நிலையில் இன்று மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் இது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இமய மலையின் மேற்கு பகுதியில் வீசும் காற்றின் மாறுபாடு காரணமாக, டெல்லியில் காற்றின் வேகம் குறைந்துள்ளது. இதன் காரணமாகவே டெல்லி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்று மாசு மீண்டும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் காற்றின் தரக் குறியீடு கடந்த சனிக்கிழமையன்று 357 ஆகவும் நேற்று 218 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story