கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு கசிவா? - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்


கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு கசிவா? - நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 20 Nov 2019 8:39 AM GMT (Updated: 20 Nov 2019 8:30 PM GMT)

கூடங்குளம் அணு உலையில் இருந்து கதிர்வீச்சு கசியாத அளவில் உலகிலேயே முதல் தரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார்.

புதுடெல்லி,

கூடங்குளம் அணு உலையில் கதிர்வீச்சு கசிவு ஏற்பட்டதாக சமூக வலைத் தளங்களில் தகவல் பரவியது.

இதுதொடர்பாக நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, நெல்லை நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. எம்.பி. ஞானதிரவியம் கேள்வி ஒன்றை எழுப்பினார். அப்போது அவர், கூடங்குளம் அணுக்கழிவுகள் எங்கே புதைக்கப்படுகிறது? கூடங்குளம் அணுமின் நிலைய கணினிகளில் ஹேக்கர்கள் ஊடுருவியது உண்மையா? என கேட்டார்.

இந்த கேள்விக்கு பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் பதில் அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

கூடங்குளம் அணுமின் நிலைய கழிவுகள் பாதுகாப்பான முறையில் பூமிக்கடியில் புதைக்கப்பட்டு வருகிறது. கழிவுகள் பூமிக்கு அடியில் 15 மீட்டர் ஆழத்தில் சேமிக்கப்பட்டு, 40 ஆண்டுக்கு பின் மறுசுழற்சி செய்யப்படும். அணுக்கழிவுகளை எந்த இடத்தில் சேமித்து வைக்க உள்ளோம் என்பதை பாதுகாப்பு காரணங்களுக்காக கூற முடியாது. அணு உலையில் சேமிக்கப்படும் கழிவுகள் 2022-க்குள் முழு கொள்ளளவை எட்டும். சேமிக்கப்பட்டுள்ள கழிவுகள் ரஷிய தொழில்நுட்பத்துடன் மீண்டும் உபயோகிக்கப் படும்.

கூடங்குளம் அணு உலையில் எந்த விதமான இணைய தாக்குதலும் நடத்த முடியாது. இணைய தாக்குதல் ஏற்படும்போது அவை அணு உலை பகுதிக்கு சென்றுவிடாமல் தடுக்க வழிமுறைகள் உள்ளன. மற்ற நாடுகளை காட்டிலும் மிகவும் பாதுகாப்பான முறையில் அணு உலை அமைக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்க பாதிப்பு இல்லாத இடத்தில் தான் கூடங்குளம் அணுமின் நிலையம் அமைந்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு கதிர்வீச்சால் பாதிப்பு இல்லை. கதிர்வீச்சு கசியாத அளவில் உலகிலேயே முதல் தரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் அங்கு செய்யப்பட்டு உள்ளது. அங்கு கதிர்வீச்சு பாதிப்பு இல்லை என விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story