மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு - காங்கிரஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்


மோடியுடன் சரத்பவார் திடீர் சந்திப்பு - காங்கிரஸ் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்தினார்
x
தினத்தந்தி 20 Nov 2019 11:15 PM GMT (Updated: 20 Nov 2019 9:55 PM GMT)

மராட்டியத்தில் ஆட்சி அமைவதில் குழப்பம் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடியை நேற்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீரென சந்தித்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

மும்பை,

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகள் இடையே முதல்-மந்திரி பதவி விஷயத்தில் ஏற்பட்ட மோதலை தொடர்ந்து எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாததால் கடந்த 12-ந் தேதி மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் எதிர் அணியை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வருகிறது. சிவசேனாவுடன் கைகோர்ப்பது தொடர்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் பேசி வந்தாலும் இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் தாமதப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறது. இந்த பரபரப்பான சூழலில் நேற்று மதியம் டெல்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் பிரதமர் மோடியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் திடீரென சந்தித்து பேசினார். பாரதீய ஜனதா ஆட்சி அமைக்க சரத்பவார் கட்சி ஆதரவு அளிக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.

ஆனால் மராட்டியத்தில் பருவம் தவறி பெய்த மழையின் காரணமாக அதிகளவில் பயிர் சேதம் அடைந்துள்ளதால் பாதிக்கப்பட்டு உள்ள விவசாயிகள் சந்தித்து வரும் பிரச்சினைகள் குறித்து அவர் பிரதமரிடம் பேசியதாக கூறப்பட்டது. விவசாயிகள் பிரச்சினையில் பிரதமர் தலையிட வேண்டி அவர் 3 பக்க கோரிக்கை மனுவையும் கொடுத்தார்.

பின்னர் வெளியே வந்த சரத்பவாரிடம், மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சென்று விட்டார்.

இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தியிடம் மராட்டியத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். ஆனால் ‘பதிலளிக்க விரும்பவில்லை’ என்று கூறி விட்டு அவர் சென்று விட்டார்.

மாலையில் டெல்லியில் உள்ள சரத்பவாரின் வீட்டில் தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத்பவார், அவரது மகள் சுப்ரியா சுலே, முன்னாள் துணை முதல்-மந்திரி அஜித்பவார், மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் மற்றும் காங்கிரஸ் சார்பில் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஜெய்ராம் ரமேஷ், மல்லிகார்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரி பிரிதிவிராஜ் சவான் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

இந்தநிலையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை (வெள்ளிக்கிழமை) மும்பையில் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் விவகாரம் குறித்து எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத், ‘எங்கள் கட்சி தலைமையில் அடுத்த மாதத்துக்குள் ஆட்சி அமையும். இது தொடர்பாக அடுத்த 2 நாட்களில் தெளிவான முடிவு கிடைக்கும்’ என்றார்.


Next Story