பாம்பு கடித்து மாணவி உயிரிழப்பு: நிதியுதவி வழங்க பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கோரிக்கை
கேரளாவில் பாம்பு கடித்து உயிரிழந்த 5-ம் வகுப்பு மாணவிக்கு நிதியுதவி வழங்க பினராயி விஜயனுக்கு ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுடெல்லி,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் அருகே சுல்தான் பத்தேரியில் உள்ள சர்வஜனா மேல்நிலைப்பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருபவர் ஷீலா ஷெரின். இந்த மாணவி நேற்று மதியம் 3.15 மணியளவில் வகுப்பறையில் அமர்ந்து பாடங்களை கவனித்து வந்துள்ளார். அப்போது வகுப்பறைக்குள் திடீரென புகுந்த பாம்பு ஒன்று ஷீலா ஷெரினை கடித்து விட்டு வேகமாக சென்று விட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த ஷீலா ஷெரின் வலி தாங்க முடியாமல் பாடம் நடத்திக்கொண்டிருந்த வகுப்பாசிரியரிடம் பாம்பு கடித்து விட்டது என்பதை தெரிவித்துள்ளார். மாணவியை சோதித்து பார்த்த ஆசிரியர் நகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், பாம்பு கடித்ததால் காயம் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுமியின் கால்கள் நீல நிறத்தில் மாறிவிட்டதாக ஷீலாவின் வகுப்பு மாணவி தெரிவித்தனர். ஷீலா பயிலும் வகுப்பு மாணவிகளும், ஒரு ஆசிரியரும் ஷீலாவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு பள்ளி நிர்வாகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால், கோரிக்கையை ஏற்காத வகுப்பு ஆசிரியர் ஷிஜில் மாணவியை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்காமல் 45 நிமிடங்களுக்கு மேல் வகுப்பறைக்கு வெளியே அமரவைத்துள்ளார். பள்ளியில் ஆசிரியர்கள் பலர் வாகனங்கள் வைத்திருந்த போதும் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல், அவரது தந்தை வரும் வரை காக்க வைத்துள்ளனர்.
பள்ளிக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் இருந்த ஷீலாவின் தந்தை தகவலறிந்து உடனடியாக பள்ளிக்கு விரைந்ததோடு ஷீலாவை தூக்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். எனினும் பாம்பு கடித்து நீண்ட நேரமாகிவிட்டதால் ஷீலாவின் உடலில் விஷம் முழுவதும் பரவிவிட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் சிறுமியை கோழிக்கோடு மருத்துவக்கல்லூரிக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக சிறுமி உயிரிழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
சிறுமியை சோதித்து பார்த்த மருத்துவர்கள் பாம்பு கடித்ததால் தான் அவர் இறந்தார் என்பதை உறுதிபடுத்தினர். பாம்பு கடித்ததால் மட்டும் ஷீலா இறக்கவில்லை, ஷீலா இறப்பிற்கு ஆசிரியர்களும் தான் காரணம் என்று ஷீலாவின் வகுப்பு மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அலட்சியமாக இருந்ததாக ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்தநிலையில், இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த வயநாடு மக்களவை தொகுதி காங்.எம்.பி. ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு கடிதம் எழுதினார். அதில் பலியான மாணவிக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
வகுப்பறையின் சுவரின் புதரில் மறைந்திருந்த பாம்பு, மாணவியை கடித்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கற்றல் இடத்தில் ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கை சோகமாக விட்டது. மேலும் தரமான பள்ளிகளை நிறுவுவதில் கேரள மாநிலம் ஒரு முன்னோடியாக இருந்து வருவதால் வயநாடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள பொதுப்பள்ளிகளின் உள்கட்டமைப்பு சரிசெய்ய மாநில அரசையும் பொதுக்கல்வி துறையையும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story