சுங்க கட்டண அட்டை ஒட்டாமல் சுங்கச்சாவடி ‘பாஸ்டாக்’ வழியில் சென்றால் 2 மடங்கு கட்டணம் - நிதின் கட்காரி
சுங்க கட்டண அட்டை ஒட்டாமல் சுங்கச்சாவடி ‘பாஸ்டாக்’ வழியில் சென்றால் 2 மடங்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின் கட்காரி அறிவித்துள்ளார்.
புதுடெல்லி,
சுங்கச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள், ஆன்லைன் மூலம் சுங்க கட்டணம் செலுத்தும் ‘பாஸ்டாக்‘ என்ற பிரிபெய்டு கட்டண முறை, டிசம்பர் 1–ந் தேதி அமலுக்கு வருகிறது. ஆன்லைனில் சுங்க கட்டணம் செலுத்தியதற்கான அட்டையை ஒட்டிக்கொண்டு, சுங்க சாவடிகளில் ‘பாஸ்டாக்‘ பிரத்யேக வழியில் வேகமாக செல்லலாம். ஒவ்வொரு தடவை செல்லும்போதும், அதற்கான கட்டணம், கழிந்தபடி இருக்கும். சுங்கச்சாவடிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த முறை கொண்டுவரப்படுகிறது.
ஆனால், ‘பாஸ்டாக்‘ அட்டை ஒட்டாமல், ‘பாஸ்டாக்‘ வழியில் செல்லும் வாகனங்களுக்கு டிசம்பர் 1–ந் தேதியில் இருந்து இருமடங்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்படும் என்று மத்திய தரைவழி போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.
அதே சமயத்தில், வழக்கமான சுங்கச்சாவடி வழிகளும் செயல்படும் என்றும், அதன்வழியாக செல்லும் வாகனங்களுக்கு வழக்கமான கட்டணம் வசூலிக்கப்படும் என்று அவர் கூறினார்.
Related Tags :
Next Story