மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்


மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும்  சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார்- சஞ்சய் ராவத்
x
தினத்தந்தி 22 Nov 2019 5:15 AM GMT (Updated: 22 Nov 2019 5:15 AM GMT)

மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும் சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறி உள்ளார்.

மும்பை,

மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவை தொடர்ந்து, வெற்றி பெற்ற பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகள் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. முதல்-மந்திரி பதவியை சுழற்சி முறையில் இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்வது என ஏற்கனவே பேசி முடிவு செய்யப்பட்டதாக சிவசேனா கூறியதை பாரதீய ஜனதா திட்டவட்டமாக மறுத்தது. இதனால் நடந்த குடுமிபிடி சண்டையால் அக்கட்சிகள் கூட்டணி அரசை அமைக்க முடியவில்லை.

கவர்னர் விதித்த கால கெடுவுக்குள் மற்ற கட்சிகளும் ஆட்சி அமைக்க முடியாமல் போனதால், மராட்டியத்தில் கடந்த 12-ந் தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

பாரதீய ஜனதாவுடன் மோதலை தொடர்ந்து, கொள்கை ரீதியாக முரண்பாடு கொண்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து தனது தலைமையில் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது. ஜனாதிபதி ஆட்சி அமல் ஆன பிறகு இது தொடர்பான பேச்சுவார்த்தையில் 3 கட்சிகளும் தீவிரம் காட்டின.

குறிப்பாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும் இரு தடவை காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசினார்.

இந்த பேச்சுவார்த்தை நேற்று டெல்லியில் உச்சக்கட்டத்தை எட்டியது. சோனியா காந்தி தனது வீட்டில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தை அவசரமாக கூட்டி ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட மூத்த தலைவர்களுடன் மராட்டிய அரசியல் நிலவரம் குறித்தும், சிவசேனா தலைமையில் ஆட்சி அமைப்பது குறித்தும் அவர் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் சிவசேனாவுடன் இணைந்து ஆட்சி அமைக்க சோனியா காந்தி பச்சை கொடி காட்டி விட்டதாகவும், இன்று இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த  நிலையில்  சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மராட்டியத்தில் 5 ஆண்டுகளுக்கும்  சிவசேனாவைச் சேர்ந்தவரே முதல்வராக இருப்பார் என கூறினார்.

Next Story