வனவாசத்தின் போது ராமருக்கு உயர்சாதியினர் உதவவில்லை; கோவா ஆளுநர் சத்யபால் மாலிக்


வனவாசத்தின் போது ராமருக்கு உயர்சாதியினர் உதவவில்லை; கோவா ஆளுநர் சத்யபால் மாலிக்
x
தினத்தந்தி 22 Nov 2019 5:52 AM GMT (Updated: 22 Nov 2019 5:52 AM GMT)

வனவாசம் சென்ற போது ராமருக்கு பழங்குடியின மக்களும், ஆதிவாசிகளுமே உதவி செய்ததாக சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.

பனாஜி,

ஜம்மு காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக், கடந்த மாதம் கோவா மாநில ஆளுநராக இடமாற்றம் செய்யப்பட்டார். கோவா மாநில ஆளுநராக பொறுப்பேற்ற பின்பு சத்யபால் மாலிக், தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்ட  நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் கூறியதாவது:-

“அயோத்தியில் ராமருக்கு பிரம்மாண்ட கோவில் கட்டுவது தொடர்பாக நாடு முழுவதும் ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்ட கோவில் கட்டப்படும் என்று  உயர் அந்தஸ்து வகிக்கும் மடாதிபதிகளும், துறவிகளும் கூறுவதை தினந்தோறும் கேட்க முடிகிறது. ராமர் கோவில் பற்றி அவர்கள் பேசும் போது, ராமரின் சிலைகள் மற்றும் ஆட்சியை பற்றி மட்டுமே பேசுகின்றனர்.

ராமரின் மனைவி, சீதா தேவியார் ராவண மன்னனால் கடத்தப்பட்ட போது, ராமரின் சகோதரர் அயோத்தியின் மன்னராக இருந்தார். ஆனால், ராமருக்கு உதவ ஒரு படை வீரர் கூட  வரவில்லை.

ராமர் இலங்கைக்கு நடைபயணமாகவே சென்ற போது, ஆதிவாசிகளும் பழங்குடியின மக்கள் என தாழ்த்தப்பட்ட சாதிகளில் இருந்த மக்களே உதவினர். உயர் சாதியைச்சேர்ந்த யாராவது, ராமருக்கு உதவினார்கள் என்று என்னிடம் யாராவது விளக்க முடியுமா?  அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் மண்டபத்தில் ராமருக்கு உதவிய அனைவரையும் சித்தரிக்க வேண்டும் என்று முறைப்படி கடிதம் எழுத உள்ளேன்” என்றார்.

Next Story