‘மராட்டிய மக்கள் மீது துல்லிய தாக்குதல்’ - பா.ஜனதா ஆட்சி அமைத்தது பற்றி உத்தவ் தாக்கரே கருத்து


‘மராட்டிய மக்கள் மீது துல்லிய தாக்குதல்’ - பா.ஜனதா ஆட்சி அமைத்தது பற்றி உத்தவ் தாக்கரே கருத்து
x
தினத்தந்தி 23 Nov 2019 8:09 AM GMT (Updated: 23 Nov 2019 9:57 PM GMT)

பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது பற்றி கருத்து தெரிவித்த உத்தவ் தாக்கரே, இது மராட்டிய மக்கள் மீது நடத்தப்பட்ட துல்லிய தாக்குதல் என்றார்.

மும்பை,

மராட்டியத்தில் தேசியவாத காங்கிரசைச் சேர்ந்த அஜித்பவாருடன் சேர்ந்து பாரதீய ஜனதா நேற்று அதிரடியாக ஆட்சி அமைத்தது பற்றி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறுகையில், “பாகிஸ்தான் மீது துல்லிய தாக்குதல் (சர்ஜிகல் தாக்குதல்) நடத்தப்பட்டது போல் மராட்டியத்தின் மீதும், மராட்டிய மக்கள் மீதும் துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. இதற்கு அவர்கள் பழி தீர்ப்பார்கள்” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “இனிமேல் தேர்தல் நடத்த வேண்டிய தேவையே இல்லை என்று நினைக்கிறேன். சத்ரபதி சிவாஜிக்கு துரோகம் இழைக்கப்பட்டு அவர் பின்னால் இருந்து தாக்கப்பட்டபோது என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். எங்கள் கட்சியின் எம்.எல்.ஏ.க்களை வேட்டையாட நினைப்பவர்களின் முயற்சிகளை சிவசேனா தொண்டர் கள் முறியடிப்பார்கள்” என்றும் தெரிவித்தார்.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் நிருபர்களிடம் கூறியதாவது:-

அஜித்பவாரின் முடிவு ஒழுக்கமற்ற செயல். இந்த அரசுக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சியோ, தொண்டர்களோ ஆதரவாக இல்லை. இது அஜித்பவாரின் தனிப்பட்ட முடிவு. அஜித்பவாருடன் செல்லும் தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது கட்சி தாவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும். அந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிகளில் எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ், சிவசேனா இணைந்து அவர்களை தோற்கடிப்போம்.

தேசியவாத காங்கிரசை சேர்ந்த 54 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்து அடங்கிய காகிதம், பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்கும் கடிதமாக கவர்னரிடம் கொடுக்கப்பட்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உண்மையென்றால் கவர்னரும் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார்.

என்ன நடக்கிறது என்று தெரியாமலே தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜ்பவனுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு சென்றவுடன் அவர்கள் என்னை தொடர்புகொண்டு இதுபற்றி தெரிவித்தனர். பதவி ஏற்பு விழாவுக்கு தெரியாமல் சென்ற எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story