புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நடைபெற்ற முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது: பாஜக


புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நடைபெற்ற முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது: பாஜக
x
தினத்தந்தி 23 Nov 2019 10:47 AM GMT (Updated: 23 Nov 2019 10:47 AM GMT)

புறவாசல் வழியாக ஆட்சியை பிடிக்க நடைபெற்ற முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

மும்பை, 

288 உறுப்பினர்களை கொண்ட மராட்டிய சட்டசபைக்கு கடந்த மாதம் 21-ந் தேதி தேர்தல் நடந்தது. 24-ந்தேதி வெளியான தேர்தல் முடிவு பெரும் அரசியல் மாற்றத்துக்கு வித்திட்டது. ஆட்சி அமைக்க 145 இடங்கள் தேவை என்ற நிலையில், பாரதீய ஜனதா, சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.  ஆனால், முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் இக்கூட்டணி உடைந்தது.  இதைத்தொடர்ந்து மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 

இதற்கு மத்தியில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க சிவசேனா தீவிரம் காட்டி வந்தது. இந்த கூட்டணிக்காக குறைந்தபட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டு, உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, இன்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே முதல் மந்திரியாக பதவியேற்க இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், திடீர் திருப்பமாக இன்று அதிகாலை 5.43 மணியளவில் மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டு, முதல்-மந்திரியாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக்கொண்டார். தேசியவாத காங்கிரஸ் கட்சியைச்சேர்ந்த அஜித் பவார் துணை முதல் மந்திரியாக பதவியேற்றுக்கொண்டார்.  

மராட்டிய அரசியல் களத்தில் ஏற்பட்ட இந்த திடீர் திருப்பம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு கடும் அதிர்ச்சி அளித்தது. நண்பகலில் செய்தியாளர்களை சந்தித்த இரு கட்சியினரும், மராட்டிய மக்களின் முதுகில் அஜித்பவார் குத்திவிட்டதாக கடுமையாக சாடியதோடு, பாஜகவையும் விமர்சித்தன.

இந்த சூழலில், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரியுமான ரவிசங்கர் பிரசாத் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறுகையில், “ மராட்டியத்தில் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத்பவார் கூட்டணி புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க முயற்சித்தது. 

இவர்களின் முயற்சியை பாஜக தடுத்து நிறுத்தியுள்ளது. மக்களின் முடிவு பாஜகவுக்கு ஆதரவாக பட்டவர்த்தனமாக இருக்கும் போது, இந்த அசுத்தமான கூட்டணியை ஏன் தடுத்து நிறுத்தக் கூடாது என்று மராட்டிய மக்கள் கேள்வி எழுப்ப துவங்கிவிட்டனர். மக்களின் முடிவுக்கு மதிப்பளிக்காமல் ஆட்சி ஏன் அமைக்க வேண்டும். 

மிகப்பெரிய மாநிலமான மராட்டியத்தில், நாட்டின் நிதி நகரம் என்று சொல்லப்படும் மும்பை உள்ளது. மும்பையை கட்டுக்குள் வைக்க புறவாசல் வழியாக ஆட்சி அமைக்க சதி நடைபெற்றது.  சிவசேனா கட்சியினர் வெற்றி பெற பாஜக முக்கிய பங்கு வகித்தது. மராட்டிய சட்டசபையில், நாங்கள் நிச்சயம் பெரும்பான்மையை காட்டுவோம்” என்றார்.  மராட்டிய சட்டசபையில், வரும் 30 ஆம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று தகவல்கள் கூறுகின்றன. 

Next Story