கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எதுவும் நடக்கும்: ‘நான் கூறியது இப்போது புரிந்து இருக்கும்’ - நிதின் கட்காரி கூறுகிறார்


கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எதுவும் நடக்கும்: ‘நான் கூறியது இப்போது புரிந்து இருக்கும்’ - நிதின் கட்காரி கூறுகிறார்
x
தினத்தந்தி 23 Nov 2019 11:11 AM GMT (Updated: 23 Nov 2019 9:54 PM GMT)

கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எதுவும் நடக்கும் என்றும், நான் கூறியது இப்போது புரிந்து இருக்கும் என்று நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

மும்பை,

மராட்டியத்தில், ஆட்சி அமைவதில் குழப்பம் நீடித்து வந்த நேரத்தில் கடந்த 15-ந் தேதி மும்பை வந்திருந்த பாரதீய ஜனதா மூத்த தலைவரும், மத்திய மந்திரியுமான நிதின் கட்காரி, மராட்டிய அரசியலை கிரிக்கெட்டுடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்தார். அப்போது, கிரிக்கெட்டை போல அரசியலிலும் கடைசி நேரத்தில் எதுவும் நிகழலாம் என கூறினார்.

அவரது இந்த கருத்து மராட்டிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நேற்று திடீர் திருப்பமாக பாரதீய ஜனதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்தது. இதன் மூலம் நிதின் கட்காரியின் ஆரூடமும் பலித்து விட்டது.

இது தொடர்பாக நேற்று நிதின் கட்காரி பேட்டி அளித்தார். அப்போது, ‘கிரிக்கெட்டிலும், அரசியலிலும் எதுவும் நடக்கலாம் என நான் முன்னரே கூறியிருந்தேன். அப்படி நான் கூறியதற்கான அர்த்தம் உங்களுக்கு இப்போது புரிந்து இருக்கும்’ என சிரித்த முகத்துடன் கூறினார்.

மேலும் அவர், ”தேவேந்திர பட்னாவிசுக்கும், அஜித்பவாருக்கும் எனது வாழ்த்துகள். அவர்களது தலைமையில் மராட்டியத்தில் நிலையான ஆட்சி அமையும். சட்டசபையில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிப்பார்கள்” என்றார்.


Next Story