மராட்டிய கவர்னருக்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு


மராட்டிய கவர்னருக்கு எதிராக 3 கட்சிகள் தொடர்ந்த வழக்கு: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 24 Nov 2019 7:20 AM GMT (Updated: 24 Nov 2019 7:43 AM GMT)

ஆளுநருக்கு பாஜக, அஜித்பவார் சமர்ப்பித்த கடிதத்தையும், ஆட்சி அமைக்க அழைத்த ஆளுநரின் கடிதத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கு தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது. நீதிபதிகள் ரமணா, அசோஹ் பூஷண், சஞ்ஜீவ் கண்ணா ஆகிய மூன்று பேர் கொண்ட அமர்வில் விசாரணை தொடங்கியது. 
 
இந்த வழக்கு விசாரணையில் அனல் பறக்கும் வாதங்கள் நடைபெற்றன.  ஆளுநரின் செயல்பாடு ஒருதலைபட்சமாக உள்ளது.  பெரும்பான்மை இருந்தால் பாஜக சட்டசபையில் நிரூபிக்கட்டும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி உடைந்துவிட்டது. அமைச்சரவை பரிந்துரை இல்லாமல் ஜனாதிபதி ஆட்சி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று சிவசேனா தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதிட்டார். 

இதையடுத்து, வாதிட்ட பாஜக தரப்பு “  மராட்டியத்தில் ஆட்சி அமைந்துவிட்டது, எனவே இந்த மனுவை விசாரிக்க கூடாது.  முதலில் சட்டப்பேரவை தலைவரை நியமனம் செய்ய வேண்டும் என்றும்  சபாநாயகரை நியமித்த பிறகே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் .மனு தாக்கல் செய்ய போதிய அவகாசம் தந்திருக்க வேண்டும்” எனக்கூறியது.

இதையடுத்து, இந்த மனு மீதான விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், பாரதீய ஜனதா ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்த கடிதத்தையும், பட்னாவிஸ் அளித்த ஆதரவு கடிதத்தையும் நாளை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. 

மேலும்,  மத்திய அரசு, மராட்டிய மாநில முதல் மந்திரி, துணை முதல் மந்திரி ஆகியோர் பதிலளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இந்த வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story