உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் : தேசியவாத காங்கிரஸ்


உச்சநீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் : தேசியவாத காங்கிரஸ்
x
தினத்தந்தி 24 Nov 2019 10:13 AM GMT (Updated: 24 Nov 2019 10:13 AM GMT)

தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் முதல்வராக தேவேந்திர பட்னாவிசை பதவி ஏற்பு செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் மத்திய அரசு, மராட்டிய அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது

அதுமட்டுமல்லாமல் ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த எம்எல்ஏ ஆதரவு கடிதங்களை நாளை காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நாளை காலை இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

இந்த சூழலில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், “ உச்சநீதிமன்றம் நாளையும் விசாரணை நடத்த உள்ளது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம். தவறான ஆவணங்கள் அடிப்படையில், மராட்டியத்தில் புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. 

எங்கள் கட்சியின்  5 எம்.எல்.ஏக்களை நேற்று எங்களால் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், இன்று அனைவருமே எங்கள் பக்கம் திரும்ப இருக்கின்றனர்.  மராட்டியத்தில் தற்போது உள்ள அரசுக்கு எந்த பெரும்பான்மையும் இல்லை. தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்துகிறோம். இல்லையென்றால், நாங்கள் அவரை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வீழ்த்துவோம்” என்றார். 

Next Story