மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? - சுப்ரீம் கோர்ட்டு இன்று முடிவு


மராட்டிய அரசியலில் அடுத்தடுத்து திருப்பம்: நம்பிக்கை வாக்கெடுப்பு எப்போது? - சுப்ரீம் கோர்ட்டு இன்று முடிவு
x
தினத்தந்தி 25 Nov 2019 12:15 AM GMT (Updated: 25 Nov 2019 2:31 AM GMT)

மராட்டிய சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பை எப்போது நடத்துவது என்பது பற்றி சுப்ரீம் கோர்ட்டு இன்று முடிவு செய்கிறது.

புதுடெல்லி,

மராட்டிய மாநில சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை பலம் கிடைக்க வில்லை.

தனிப்பெரும் கட்சியாக வந்த பாரதீய ஜனதா, 2-வது பெரிய கட்சியான சிவசேனா, 3-வது பெரிய கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

இதையடுத்து கடந்த 12-ந் தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா, தேர்தலுக்கு பின்னர் முதல்-மந்திரி பதவி போட்டியிலும், மந்திரிசபையில் சரிபாதி இடங்கள் கேட்டும் உருவான பிரச்சினையிலும், அந்த கூட்டணியை விட்டு வெளியேறியது.

அதைத்தொடர்ந்து அந்த கட்சி, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து புதிய கூட்டணி அமைத்து, அரசு அமைக்க முயற்சி மேற்கொண்டது.

இந்த கூட்டணி கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டு, உத்தவ் தாக்கரே தலைமையில் புதிய அரசு பதவி ஏற்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் 22-ந் தேதி இரவு அறிவித்தார்.

ஆனால் அதன்பின்னர் இரவோடு இரவாக அதிரடி திருப்பங்கள் அடுத்தடுத்து நடந்தன.

சற்றும் எதிர்பாராத வகையில், 105 இடங்களை பெற்றுள்ள பாரதீய ஜனதா 54 இடங்களை வென்ற தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித்பவாருடன் திடீர் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியிடம் உரிமை கோரியது.

அதையடுத்து, ஜனாதிபதி ஆட்சி நேற்று முன்தினம் அதிகாலையில ரத்து ஆனது. உடனே பாரதீய ஜனதா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணியின் புதிய அரசு அமைந்தது. கவர்னர் மாளிகையில் அவசர அவசரமாக ஏற்பாடு செய்யப்பட்ட பதவி ஏற்பு நிகழ்ச்சியில், தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டசபை கட்சி தலைவர் அஜித் பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இது சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணிக்கு பேரதிர்ச்சியாக அமைந்தது.

உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் அக்கட்சிகள் கூட்டாக ஒரு ‘ரிட்’ வழக்கு தாக்கல் செய்தன.

அந்த வழக்கில், மராட்டியத்தில் தேவேந்திர பட்னாவிஸ் அரசு அமைய கவர்னர் எடுத்த நடவடிக்கைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டன. மேலும், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரித்து, மராட்டியத்தில் குதிரைப்பேரம் நடப்பதை தவிர்க்கிற வகையில் உடனடியாக தேவேந்திர பட்னாவிஸ் அரசு சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று, ஞாயிற்றுக்கிழமை விசாரிக்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு பதிவாளர் கூறினார்.

அதன்படி, நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளாக இருந்தபோதும், இந்த வழக்கில் சிறப்பு நிகழ்வாக மூத்த நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷண், சஞ்சய் கன்னா ஆகியோரை கொண்ட அமர்வு முன் விசாரணை நடந்தது.

வழக்குதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல்கள் கபில் சிபலும், அபிஷேக் சிங்வியும் ஆஜராகினர். மத்திய அரசின் சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

பாரதீய ஜனதா எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் மற்றும் சில சுயேச்சைகள் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

விசாரணையின் தொடக்கத்தில் கபில் சிபல் வாதிடும்போது ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யவும், தேவேந்திர பட்னாவிசுக்கு பதவிப்பிரமாணம் செய்யவும் முடிவு எடுத்தது வினோதமானது என குறிப்பிட்டார்.

“தேவேந்திர பட்னாவிசுக்கு பெரும்பான்மை இருந்தால், அவர் உடனே சட்டசபையில் அதை நிரூபிக்கப்பட்டும். இல்லையென்றால், அரசு அமைப்பதற்கான பலம் எங்களுக்கு இருக்கிறது” என்றும் கூறினார்.

அபிஷேக் சிங்வி வாதிடுகையில், “மராட்டிய மாநிலத்தில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை. தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 54. இதில் 41 எம்.எல்.ஏ.க்கள் சரத் பவாருடன் உள்ளனர். அஜித்பவாரை சட்டசபை தேசியவாத காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்கி, அவர்கள் கவர்னருக்கு கடிதம் எழுதி உள்ளனர்” என கூறினார்.

“பெரும்பான்மையை நிரூபிக்க அவர்களுக்கு 30-ந்தேதி வரை கவர்னர் அவகாசம் அளித்திருப்பது வேறு ஏதாவது செய்வதற்காகத்தான்” என்று கபில் சிபல் குறிப்பிட்டார்.

அவரும், அபிஷேக் சிங்வியும் கூட்டாக கூறும்போது, “41 எம்.எல்.ஏ.க்கள் அவர்களுடன் இல்லாதபோது, அரசு அமைக்க அவர்களை அனுமதித்தது என்பது முற்றிலும் ஜனநாயக துரோகமும், ஜனநாயக சீரழிவும் ஆகும்” என்றனர்.

முகுல் ரோத்தகி வாதிடும்போது, “இந்த ‘ரிட்’ வழக்கு இங்கு விசாரணை செய்வதற்கு ஏற்றதுதானா? அவர்கள் மும்பை ஐகோர்ட்டை நாடி இருக்க வேண்டும்” என்று கூறினார். மேலும், “அந்த 3 கட்சிகளுக்கும் அரசு அமைக்க அவகாசம் தரப்பட்டது. எனவே பெரிய அவசரம் ஏதுமில்லை. பட்னாவிஸ் பெரும்பான்மையை நிரூபிக்க விடுங்கள்” என்றார்.

அபிஷேக் சிங்வி, 2018-ம் ஆண்டு கர்நாடக விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை சுட்டிக்காட்டி, அப்போது சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது; ஆனால் ரகசிய ஓட்டுச்சீட்டு கிடையாது என கூறினார். அத்துடன், சட்டசபையில் பலத்தை நிரூபிப்பது என்பது அரசியல் சாசனத்தின்படியானது. அது அரசியல் சாசன கடமைதான். முறை எதுவும் இல்லை. அதற்கு உத்தரவிடலாம் எனவும் குறிப்பிட்டார்.

முகுல் ரோத்தகி தொடர்ந்து வாதிடும்போது, “கவர்னர் நேற்று (சனிக்கிழமை) செய்ததை நீதிமன்ற ஆய்வுக்கு உட்படுத்த முடியாது. அரசு அமைக்க ஒருவரை அழைப்பது என்பது அவரது விருப்ப உரிமை. சட்டசபையில் பலத்தை நிரூபிப்பதுதான் முடிவானது. அதற்கு 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் இந்த வழக்கு, கவர்னரின் உத்தரவுகளோ, ஆவணங்களோ, இணைப்புகளோ இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது; அரசியல் சாசனம் பிரிவு 361-ன் கீழ், அரசு அமைக்க உரிமை கோருவோரில் முதல்-மந்திரியாகவோ, பிரதமராகவோ பதவி ஏற்க யாரை அழைப்பது என்பதில் கவர்னருக்கும், ஜனாதிபதிக்கும் விருப்ப உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்குக்கு பதில் அளிப்பதற்கு ஒவ்வொரு தரப்புக்கும் கொஞ்சம் அவகாசம் தர வேண்டும், ஞாயிற்றுக்கிழமையை அமைதியாக கழிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் முகுல் ரோத்தகி கேட்டுக்கொண்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க சிறந்த வழி, சட்டசபையில் பலப்பரீட்சை நடத்துவதுதான் என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை” என கருத்து தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள், மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம், மத்திய அரசுக்கு ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்து கவர்னர் எழுதிய கடிதத்தையும், தேவேந்திர பட்னாவிஸ் புதிய அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்த கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.

கவர்னரின் கடிதங்களை தாக்கல் செய்வதற்கு 2 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என்ற துஷார் மேத்தாவின் தீவிர கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர்.

இந்த கடிதங்களை திங்கட்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கில் மத்திய அரசு, மராட்டிய மாநில அரசு, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரி அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்புமாறும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. அப்போது சட்ட சபையில் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக முடிவு செய்து தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story