அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு -ஆளுநர் தரப்பு வாதம்


அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக ஆட்சி அமைக்க அழைப்பு -ஆளுநர் தரப்பு வாதம்
x
தினத்தந்தி 25 Nov 2019 5:38 AM GMT (Updated: 25 Nov 2019 5:38 AM GMT)

அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததாக ஆளுநர் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆட்சி அமைப்பதில் இழுபறி ஏற்பட்டது. இதனால், ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இதற்கு மத்தியில், பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட சிவசேனா, காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில், திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவாருடன் இணைந்து பாஜக ஆட்சி அமைத்தது. இதன்படி முதல் மந்திரியாக பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். துணை முதல் மந்திரியாக அஜித் பவார் பதவியேற்றார்.

ஆட்சி அமைக்க பாஜகவுக்கு அழைப்பு விடுத்த ஆளுநரின் முடிவுக்கு எதிராக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. இந்த மனுவை நேற்று அவசர மனுவாக விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநர் ஆட்சி அமைக்க விடுத்த அழைப்பு கடிதத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யுமாறு பரிந்துரை செய்து ஆளுநர் எழுதிய கடிதத்தையும் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது.

இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீலிடப்பட்ட உறையில் இரண்டு கடிதங்களும்  அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து இந்த வழக்கில் விசாரணை நடைபெற்றபோது,  அதிக எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜகவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கப்பட்டதாக ஆளுநர் தரப்பு கூறியது.

மேலும், பெரும்பான்மை இருந்ததால் குடியரசு தலைவர் ஆட்சி ரத்து செய்யப் பரிந்துரை செய்யப்பட்டதாகவும்,  சுயேட்சைகளில் பலர் பாஜகவிற்கு ஆதரவு தெரிவித்தனர். அஜித்பவார், தான் தேசியவாத காங்கிரஸ் தலைவர் என கடிதம் அளித்தார் என்று தெரிவித்தது. தொடர்ந்து இந்த வழக்கில் காரசார  வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

Next Story