மும்பை பங்கு சந்தை; வரலாறு காணாத உச்சம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு


மும்பை பங்கு சந்தை; வரலாறு காணாத உச்சம் தொட்ட சென்செக்ஸ் குறியீடு
x
தினத்தந்தி 25 Nov 2019 10:52 AM GMT (Updated: 25 Nov 2019 10:52 AM GMT)

மும்பை பங்கு சந்தையில் வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் அடைந்துள்ளது.

மும்பை,

மும்பை பங்கு சந்தையில் இன்று நண்பகல் அளவில் திடீரென சென்செக்ஸ் குறியீடு 487 புள்ளிகளுக்கு கூடுதலாக உயர்ந்து இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் அடைந்துள்ளது.  மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வழக்கம்போல் வர்த்தகம் தொடங்கினாலும், 30 பங்குகள் கொண்ட சென்செக்ஸ் குறியீட்டில் மதியத்தில் வரலாறு காணாத வகையில் 487.76 புள்ளிகள் அல்லது 1.21 சதவீதம் உயர்வடைந்து 40,847.17 புள்ளிகளாக இருந்தது.

இவற்றில் பாரதி ஏர்டெல் நிறுவனம் 5.69 சதவீதம் என்ற அளவில் அதிக லாபமுடன் சென்செக்ஸ் குறியீட்டிற்கான வரிசையில் முதல் இடம் பிடித்தது.  இதனை தொடர்ந்து டாடா ஸ்டீல் 4.74 சதவீதம், வேதாந்தா 2.81 சதவீதம், இன்டஸ்இன்ட் வங்கி 2.49 சதவீதம், எச்.டி.எப்.சி. 2.40 சதவீதம், மாருதி 2.20 சதவீதம், ஹீரோ மோட்டோகார்ப் 2.12 சதவீதம் மற்றும் கோட்டக் வங்கி 1.95 சதவீதம் என்ற அளவில் லாபமடைந்திருந்தது.

இதேபோன்று தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 136.80 புள்ளிகள் அல்லது 1.15 சதவீதம் என்ற அளவில் உயர்வடைந்து 12,051.20 புள்ளிகளாக இருந்தது.

கடந்த 20ந்தேதி இதேபோன்று மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 40,816 புள்ளிகளை தொட்டு முதன்முறையாக வரலாறு காணாத உச்சமடைந்து இருந்தது.  அன்றைய தினம் மதிய அளவில் வர்த்தகத்தின் இடையே மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 346 புள்ளிகள் உயர்ந்து 40,816 புள்ளிகளை தொட்டு வரலாறு காணாத உச்சம் அடைந்து இருந்தது.  அதற்கு முன் 40,789 புள்ளிகள் என்ற அளவிலேயே சென்செக்ஸ் குறியீடானது உச்சம் அடைந்து இருந்தது.

இந்நிலையில், மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று புதிய உச்சம் தொட்டுள்ளது.  இந்த வருட இறுதிக்குள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளிடையே வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட கூடும் என செய்திகள் வெளியான நிலையில், சென்செக்ஸ் குறியீடு புதிய உச்சம் அடைந்து உள்ளது என வர்த்தகர்கள் கூறியுள்ளனர்.  அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வர்த்தகம் தொடங்கியபொழுது, ரூ.71.69 ஆக உயர்ந்திருந்தது.

Next Story