ஜனநாயக படுகொலை என ராகுல் காந்தி ஆவேசம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி - இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு


ஜனநாயக படுகொலை என ராகுல் காந்தி ஆவேசம்: நாடாளுமன்றத்தில் கடும் அமளி - இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 26 Nov 2019 12:15 AM GMT (Updated: 25 Nov 2019 7:17 PM GMT)

மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தால் நேற்று நாடாளுமன்றத்தில் போர்க்கோலம் பூண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு சபைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

புதுடெல்லி,

மராட்டிய மாநிலத் தில் எந்த கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சி அமைக்க முன்வராததால், கடந்த 12-ந்தேதி அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல் படுத்தப்பட்டது.

இந்தநிலையில் அங்கு சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்க நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான அஜித்பவாருடன் இணைந்து கடந்த 23-ந்தேதி பாரதீய ஜனதா திடீரென ஆட்சி அமைத்தது.

இதனால் மராட்டியத்தில் பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பாரதீய ஜனதா மீது எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வரும் நிலையில், இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

மராட்டியத்தில் ஏற்பட்டுள்ள இந்த அரசியல் குழப்பம் நேற்று நாடாளுமன்றத்தில் புயலை கிளப்பியது. ஆளும் பாரதீய ஜனதாவுக்கு எதிராக போர்க்கோலம் பூண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சரமாரியாக குற்றம்சாட்டினார்கள். இதனால் இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது.

மக்களவை காலையில் கூடியதும் காங்கிரஸ் உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கை வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்திக்கொண்டு அவையின் மையப்பகுதிக்கு சென்று அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது துணைக்கேள்விகளை எழுப்ப காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அவைத்தலைவர் அனுமதி அளித்தார். அவர் கூறுகை யில், ‘நான் கேள்வி எழுப்புவதில் எந்த அர்த்தமும் இல்லை. ஏனெனில் மராட்டியத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறது’ என ஆவேசமாக கூறினார்.

இதற்கிடையே, ‘ஜனநாயக படுகொலையை நிறுத்துங்கள்’ என்ற வாசகம் அடங்கிய மிகப்பெரிய கருப்பு பேனர் ஒன்றை காங்கிரஸ் எம்.பி.க்களான ஹிபி ஈடன், பிரதாபன் இருவரும் அவை முழுவதும் ஏந்திச்சென்று கோஷங்களை எழுப்பினர்.

இதனால் கடும் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்கள் இருவரையும் அவையை விட்டு வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆனால் காவலர்களுடன் தகராறில் ஈடுபட்ட அவர்கள் மற்ற உறுப்பினர்களுடன் இணைந்து அரசுக்கு எதிராக தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து மக்களவையை நண்பகல் 12 மணி வரை சபாநாயகர் ஒத்திவைத்தார். பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் இதே நிலை நீடித்ததால், பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் பிற்பகல் 2 மணிக்கு சபை கூடியபோதும் அமளி ஓயவில்லை. காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையின் மையப்பகுதியில் முகாமிட்டு அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால் அவையை நடத்த வழி ஏற்படாததால், சபை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவையில் அமளியில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.பி.க் கள் ஹிபி ஈடன், பிரதாபன் ஆகிய இருவரையும் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்ய சபாநாயகர் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விவகாரத்தில் எம்.பி.க்கள் இருவரும் மன்னிப்பு கேட்க மறுத்து வருவதால் சபாநாயகர் அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது.

மராட்டிய அரசியல் விவகாரம் மாநிலங்களவையிலும் எதிரொலித்தது. காலையில் அவை கூடியதும் மராட்டிய விவகாரம் தொடர்பாக அவை விதி எண் 267-ன் கீழ் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என காங்கிரஸ், தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சி உறுப்பினர் கள் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இந்த விவகாரம் கோர்ட்டு விசாரணையில் இருப்பதால், இதற்கு அனுமதிக்க முடியாது எனக்கூறி அவைத்தலைவர் வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தில் மத்திய மந்திரி முக்தர் அப்பாஸ் நக்வி பேச வெங்கையா நாயுடு அனுமதி அளித்தார்.

இதைத்தொடர்ந்து எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இந்த அமளியின் மத்தியிலும் சர்வதேச நிதிச்சேவை மையங்கள் அதிகார மசோதாவை திரும்பப்பெறும் பரிந்துரையை நிதித்துறை இணை மந்திரி அனுராக் தாகூர் தாக்கல் செய்தார். இந்த பரிந்துரை நிறைவேறியது.

தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால், சபையை பிற்பகல் 2 மணி வரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார். பின்னர் பிற்பகல் 2 மணிக்கு சபை கூடிய போதும் காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரி எம்.பி.க் களின் அமளி தொடர்ந்தது. இதனால் சபையை நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக துணைத்தலைவர் ஹர்வன்ஷ் அறிவித்தார்.

மராட்டிய மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சி அமைத்த வழிமுறையை கண்டித்து, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமை தாங்கினார்.

இதில், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, அகமது படேல், ஆனந்த் சர்மா, சசிதரூர் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆட்சி அமைக்க நள்ளிரவில் பா.ஜனதா மேற்கொண்ட முயற்சி, ஜனநாயக படுகொலை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷமிட்டனர். நீதி வேண்டும் என்று எழுதப்பட்ட பதாகைகளையும் அவர்கள் கையில் பிடித்திருந்தனர்.


Next Story