மராட்டியத்தில் நாளை முதல்-மந்திரி பதவியேற்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு


மராட்டியத்தில் நாளை முதல்-மந்திரி பதவியேற்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு
x
தினத்தந்தி 27 Nov 2019 5:45 PM GMT (Updated: 27 Nov 2019 5:45 PM GMT)

மராட்டியத்தில் நாளை நடைபெற உள்ள முதல்-மந்திரி பதவியேற்பு விழாவுக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை,

கடந்த ஒரு மாதமாக மராட்டியத்தில் நிலவி வந்த அரசியல் குழப்பம் தீர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து நாளை ஆட்சி அமைக்க உள்ளன.  அந்த கூட்டணியில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்-மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இதனைதொடர்ந்து மராட்டிய மாநிலத்தின் முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் மற்றும் மகா விகாஸ் அகாடி தலைவரான உத்தவ் தாக்கரே நாளை பதவியேற்கிறார். இதற்கான நிகழ்ச்சிகள் நாளை மாலை 6.40 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெற உள்ளன. இதனையடுத்து விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்குமாறு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு சிவசேனா கட்சியின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  சிவசேனா கட்சியின் முக்கிய தலைவரும், உத்தவ் தாக்கரேவின் மகனுமான ஆதித்யா தாக்கரே இன்று சோனியா காந்தியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, நாளை மும்பையில் நடைபெற உள்ள பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தார். மேலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் வீட்டிற்கு சென்ற ஆதித்யா தாக்கரே பதவி ஏற்பு விழாவில் விருந்தினராக பங்கேற்க வருமாறு அவருக்கும் அழைப்பு விடுத்தார்.

இதேபோன்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   


Next Story