மராட்டியத்தில் பதவியேற்பு விழா; பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம்


மராட்டியத்தில் பதவியேற்பு விழா; பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம்
x
தினத்தந்தி 28 Nov 2019 12:33 PM GMT (Updated: 28 Nov 2019 12:33 PM GMT)

மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

புதுடெல்லி,

மராட்டிய சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா-சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றும் கருத்து வேறுபாடு காரணமாக ஆட்சி அமைக்க முடியாததால், அந்த மாநிலத்தில் கடந்த 12-ந்தேதி ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதன்பிறகு அங்கு அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நிகழ்ந்தன. காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆட்சி அமைக்க இருந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக கடந்த 23-ந்தேதி அதிகாலை 5.37 மணிக்கு மராட்டியத்தில் ஜனாதிபதி ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டு, தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தது. தேவேந்திர பட்னாவிஸ் முதல்-மந்திரியாகவும், அஜித்பவார் துணை முதல்-மந்திரியாகவும் பதவி ஏற்றனர்.

இதை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று மாலைக்குள் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு தேவேந்திர பட்னாவிசுக்கு உத்தரவிட்டதால், தீர்ப்பு வெளியான சில மணி நேரத்தில் துணை முதல்-மந்திரி பதவியை விட்டு அஜித்பவார் விலகினார். அவரை தொடர்ந்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ராஜினாமா செய்தார்.

அவசரகதியில் பதவி ஏற்ற பாரதீய ஜனதா அரசின் ஆயுள் வெறும் 4 நாட்களில் முடிந்து போனது. இதனால் அந்த கட்சிக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போனது. 

இதைத்தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி (மராட்டிய வளர்ச்சி முன்னணி) அரசு அமைக்க வழி பிறந்தது. இதையடுத்து, சிவசேனா கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே இன்று மராட்டிய முதல் மந்திரியாக பதவியேற்க உள்ளார்.  மும்பையில் உள்ள சிவாஜி பார்க் மைதானத்தில் இந்த பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடப்பட்டது.  இதேபோன்று மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு மாநில காங்கிரஸ் முதல் மந்திரிகளுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது.  பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, சிவசேனா சார்பில் அழைப்பு விடப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி, உத்தவ் தாக்கரேவுக்கு இன்று எழுதியுள்ள கடிதம் ஒன்றில், நாடு பா.ஜ.க.வால் முன்னறிவிக்கப்படாத அச்சுறுத்தல்களை சந்தித்து கொண்டிருக்கும் வேளையில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முழு அசாதாரண சூழ்நிலைகளின் கீழ் ஒன்றிணைந்து உள்ளன.

நாட்டின் பொருளாதாரம் உருக்குலைந்து உள்ளது.  விவசாயிகள் அதிக மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

ஆதித்ய தாக்கரே நேற்று என்னை சந்தித்து இன்று மாலை நீங்கள் பதவியேற்கும் விழாவில் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுத்துள்ளார்.  எனினும், இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாததற்கு நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன் என்று அதில் தெரிவித்து உள்ளார்.

Next Story