ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் - மத்திய படையினருக்கு புதிய சலுகை


ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் இருக்கலாம் - மத்திய படையினருக்கு புதிய சலுகை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 9:18 PM GMT)

மத்திய படையினர் ஆண்டுக்கு 100 நாட்கள் குடும்பத்தினருடன் செலவிட அனுமதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

மத்திய படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்பு படையின் 55-வது ஆண்டு விழா நேற்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வர இயலாததால், மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பங்கேற்றார்.

எல்லை பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வீர தீர செயல்கள் மற்றும் சிறப்பான செயல்பாட்டுக்கான பதக்கங்களை வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில், நித்யானந்த் ராய் பேசியதாவது:-

எல்லை பகுதிகளில் உள்ள சூழ்நிலையை சீர்குலைக்க தேசவிரோத சக்திகள் முயற்சிக் கிறன. அந்த சக்திகளின் ஊடுருவல் மற்றும் கடத்தல் முயற்சிகளை எல்லை பாதுகாப்பு படை முறியடித்து வருகிறது.

370-வது பிரிவு ரத்தால், காஷ்மீரில் சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், தேசவிரோத சக்திகள், அங்கு பிரச்சினை உண்டாக்க முயற்சிக்கின்றன. எல்லை பாதுகாப்பு படை, சுவர் போல் நின்று அத்தகைய முயற்சிகளை முறியடித்து வருகிறது. அதனால், தீய சக்திகள், ஆயிரம் தடவை யோசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் கூட கர்தார்பூர் வழித்தடத்தை பாதுகாக்கும் பொறுப்பு, இந்த படைக்கு அளிக்கப்பட்டது.

இந்த படையினரின் கடினமான பணிச்சூழல், மத்திய அரசுக்கு தெரியும். அதனால், எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட அனைத்து மத்திய படைகளில் பணியாற்றும் வீரர்கள் ஒவ்வொருவரும் ஆண்டுக்கு 100 நாட்கள், தங்கள் குடும்பத்துடன் இருக்க அனுமதிக்கும் திட்டம் ஒன்றை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் வழங்கப்படும். ஓய்வு பெறும் வயதை 60 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்து தரப்படும். இவ்வாறு அவர் பேசினார்.


Next Story