தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு


தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் :  பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 3:17 PM IST (Updated: 2 Dec 2019 3:17 PM IST)
t-max-icont-min-icon

ரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

மராட்டியத்தில்  முதல் மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வது தொடர்பாக பாஜகவுக்கும் சிவசேனாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், அங்கு ஆட்சி அமைப்பதில் கடும் இழுபறி ஏற்பட்டது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் இணைந்து மகா விகாஷ் முன்னணி என்ற கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தீவிரம் காட்டி வந்தது. அப்போது,  யாரும் எதிர்பாராத வகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித்பவார் ஆதரவுடன் பாஜக அதிகாலையில் ஆட்சி அமைத்தது.  இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, பெரும்பான்மை நிரூபிக்க தேவேந்திர பட்னாவிஸ் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பதால், 80 மணி நேரத்திற்குள் முதல் மந்திரி பதவியை தேவேந்திர பட்னாவிஸ் ராஜினாமா செய்தார். 

இதன்பிறகு,  ‘மகா விகாஷ் முன்னணி'  கூட்டணி ஆட்சி அமைத்தது. முதல் மந்திரியாக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே பதவி ஏற்றுள்ளார்.  பெரும்பான்மை இல்லாத போது, அவசர அவசரமாக  பாஜக ஆட்சி அமைத்தது, பரவலாக  அரசியல் விமர்சகர்களால் விமர்சிக்கப்பட்டது.   இந்த நிலையில், ரூ.40 ஆயிரம் கோடியை மத்திய அரசுக்குத் திருப்பி அனுப்பவே 2-வது முறையாக மராட்டிய முதல் மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றார் என்று  பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே  கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான அனந்த் குமார் ஹெக்டே கர்நாடகத்தில்  நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதில்," மகாராஷ்டிராவில் பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்பது எங்களுக்குத் தெரியும். தெரிந்துதான் திட்டமிட்டு ஒரு நாடகம் நடத்தினோம். முதல்வரின் கீழ் மத்திய அரசின் ரூ.40 ஆயிரம் கோடி நிதி இருக்கிறது. அதை அடுத்துவரும் முதல்வர், காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் வளர்ச்சிக்காகப் பயன்படுத்தமாட்டார்கள் என்பது தெரியும். ஆதலால், அதை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பவே பட்னாவிஸ் 2-வது முறையாகப் பதவி ஏற்றார். பணத்தை மத்திய அரசுக்கு அனுப்பிய பின் அவர் பதவி விலகினார்" என்றார். 

Next Story