தனது டுவிட்டர் பெயர் குறிப்பில் இருந்து ‘பாஜக’வை நீக்கிய பங்கஜா முண்டே


தனது டுவிட்டர் பெயர் குறிப்பில் இருந்து ‘பாஜக’வை நீக்கிய பங்கஜா முண்டே
x
தினத்தந்தி 2 Dec 2019 5:20 PM IST (Updated: 2 Dec 2019 5:20 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சரான பங்கஜா முண்டே தனது டுவிட்டர் பக்கத்தின் பெயர் குறிப்பில் இருந்து 'பாஜக' என்ற வார்த்தையை நீக்கியுள்ளார்.

மும்பை,

மராட்டிய மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவை சேர்ந்த பங்கஜா முண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தனஞ்சய் முண்டேவிடம் 30,000 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகளான இவர் மராட்டிய மாநிலத்தில் பாஜக ஆட்சியின்போது கிராமப்புற வளர்ச்சி, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலம் ஆகிய துறைகளின் அமைச்சராக பதவி வகித்தார்.

இந்நிலையில் தனது பேஸ்புக் பக்கத்தில் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டு விட்டதாகவும் மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் தனது வருங்கால பயணம் குறித்து முடிவு செய்ய வேண்டிய நிலை வந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அவர், வரும் 12 ஆம் தேதி தனது தந்தையின் நினைவு நாளன்று தனது ஆதரவாளர்களை சந்திக்க இருப்பதாகவும் அதில் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவரை பற்றிய டுவிட்டர் குறிப்பில் 'பாஜக' என்ற வார்த்தையை நீக்கியுள்ளார். இதனால் அவர் பாஜகவில் இருந்து விலகப்போவதாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்துப் பேசிய மராட்டிய மாநிலத்தின் பாஜக செய்தி தொடர்பாளர் சிரீஷ் போரால்கர், “பாஜக கட்சியில் இருந்து விலக போவதாக பங்கஜா முண்டே எங்கும் குறிப்பிடவில்லை. கட்சிக் கூட்டங்களில் அவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார். மராட்டிய மாநிலத்தில் பாஜக அரசை கட்டமைக்க, அவரது தந்தை கடுமையாக  உழைத்தவர் ஆவார்” என்று கூறியுள்ளார்.

Next Story