எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளித்ததை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தல்


எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக்கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளித்ததை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தல்
x
தினத்தந்தி 2 Dec 2019 9:00 PM GMT (Updated: 2 Dec 2019 8:48 PM GMT)

எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக் கீட்டில் கிரீமிலேயருக்கு விலக்கு அளித்த உத்தரவுக்கு எதிரான மனுவை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வலியுறுத்தியது.

புதுடெல்லி,

சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல்சாசன அமர்வு 2018-ம் ஆண்டு எஸ்.சி.-எஸ்.டி. வகுப்பினரின் நலன்கருதி அவர்களுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயருக்கு (பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு) விலக்கு அளிக்கப்படுகிறது என உத்தரவிட்டது.

இந்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தது. அதேபோல இந்த உத்தரவுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, எஸ்.சி.-எஸ்.டி. ஒதுக்கீட்டில் இருந்து கிரீமிலேயர் விலக்கு அளிக்கும் பிரச்சினையை 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றலாமா? அல்லது 2 வாரங்களுக்கு பின்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாமா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மத்திய அரசு தரப்பில், இந்த பிரச்சினையை மறுஆய்வு செய்ய 7 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று பதில் அளிக்கப்பட்டது.

அதேசமயம் இதுதொடர்பாக சாம்தா அண்டோலன் சமிதி மற்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஓ.பி.சுக்லா ஆகியோர் தரப்பில் புதிய மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதில் ஒரு மனுவில், எஸ்.சி.-எஸ்.டி. பிரிவினரில் கிரீமிலேயரை அடையாளம் காண்பதற்காக ஒரு பாரபட்சமற்ற, நியாயமான தேர்வை நடத்தலாம். இதன்மூலம் கிரீமிலேயர் அல்லாதவர்களை தனியாக பிரிக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.


Next Story