பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குளறுபடி - விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தகவல்


பிரியங்கா காந்தி இல்ல பாதுகாப்பில் குளறுபடி - விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தகவல்
x
தினத்தந்தி 3 Dec 2019 12:21 PM GMT (Updated: 3 Dec 2019 12:21 PM GMT)

பிரியங்கா காந்தியின் இல்லத்திற்குள் அத்துமீறி 5 பேர் நுழைந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் இல்லத்தில் திடீரென அனுமதியில்லாமல் ஒரு கார் உள்ளே வந்துள்ளது. அதில் வந்திறங்கிய 5 பேர் பிரியங்கா காந்தியை சந்திக்க முற்பட்டதோடு, அவருடன் செல்பி எடுக்கவும் முயன்றுள்ளனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மாநிலங்களவையில் எஸ்.பி.ஜி. சட்ட திருத்த மசோதா தொடர்பான விவாதத்தின் போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,  பிரியங்கா காந்தியின் இல்லத்தில் நடந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக உயர்மட்ட குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 மேலும், இவ்விவகாரம் தொடர்பாக மூன்று வீரர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக தெரிவித்த அமித்ஷா, ராகுல் காந்தி வருகை தர இருந்த நேரத்தில்,  கருப்பு நிற சபாரி காரில் காங்கிரஸ் கட்சியினர் வந்தனர். இதனால், காரை பரிசோதிக்காமலேயே வீட்டிற்குள் அனுப்பியுள்ளனர். இது ஒரு விரும்பத்தகாத தற்செயல் நிகழ்வு என்று குறிப்பிட்ட அமித்ஷா, 0.001 சதவீதம் கூட பாதுகாப்பில் குளறுபடி நடக்கக்கூடாது என்பதால் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். 

Next Story