பேஸ்புக் நண்பருடன் கர்தார்பூர் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்ல முயன்ற சீக்கிய பெண்
சீக்கிய பெண் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்த தனது பேஸ்புக் நண்பருடன் கர்தார்பூர் வழியாக பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளார்.
புதுடெல்லி,
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் புனித தலமான தர்பார் சாகிப் குருத்வாராவிற்கு இந்தியாவில் உள்ள சீக்கியர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்காக கர்தார்பூர் வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வழித்தடம் கடந்த நவம்பர் மாதம் 9 ஆம் தேதி, புனித பயணம் மேற்கொள்ளும் சீக்கியர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த வழியாக செல்லும் சீக்கியர்கள் கர்தார்பூரில் உள்ள தர்பார் சாகிப் குருத்வாரவிற்கு மட்டும் சென்று வர முடியும். பாகிஸ்தானின் பிற பகுதிகளுக்குச் செல்ல முடியாது.
இந்நிலையில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மஞ்சித கவுர் என்ற இளம்பெண், பேஸ்புக் மூலமாக பாகிஸ்தானின் பைசாலாபாத் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் அறிமுகமானார்.
பேஸ்புக் மூலமாக பழகி வந்த இவர்கள் நேரில் சந்திக்க திட்டமிட்டனர். அதன்படி கர்தார்பூர் குருத்வாராவிற்கு புனித பயணம் மேற்கொள்பவர்களுடன் இணைந்து மஞ்சித் கவுர் சென்றுள்ளார்.
குருத்வாராவில் வைத்து தனது நண்பரை சந்தித்த அவர் பின்னர் அவருடன் சேர்ந்து பாகிஸ்தானுக்கு செல்ல முடிவெடுத்துள்ளார். ஆனால் கர்தார்பூரில் இருந்து பாகிஸ்தானுக்கு செல்லும் பயணிகளிடம் பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையின் போது அவர்கள் இருவரும் பிடிபட்டனர்.
பாதுகாப்பு படை அதிகாரிகளிடம் தான் தனது பாகிஸ்தான் நண்பருடன் செல்ல விரும்புவதாக மஞ்சித் கவுர் தெரிவித்துள்ளார். இது குறித்து இந்திய பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்த அவர்கள் அந்த பெண்ணை இந்தியாவிற்கு திருப்பி அனுப்பினர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த இளைஞர் மற்றும் அவரது இரு நண்பர்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்திய அதிகாரிகள் அவர்களை தங்கள் இருப்பிடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
தனது பேஸ்புக் நண்பரை சந்திப்பதற்காக பெண் ஒருவர் கர்தார்பூர் வழித்தடத்தை பயன்படுத்திய நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story