சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியது


சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கு: இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியது
x
தினத்தந்தி 3 Dec 2019 10:15 PM GMT (Updated: 3 Dec 2019 8:43 PM GMT)

சென்னை-சேலம் 8 வழிச்சாலை வழக்கில், இடைக்கால மனு தாக்கல் செய்ய மத்திய அரசு காலஅவகாசம் கோரியுள்ளது. இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வர உள்ளது.

புதுடெல்லி,

சென்னை-சேலம் இடையே 8 வழிச்சாலை அமைக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசை சேர்ந்த வக்கீல் ஏ.பி.சூரியபிரகாசம், விவசாயி பி.வி.கிருஷ்ணமூர்த்தி, பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்ததோடு, ஏற்கனவே கையகப்படுத்திய நிலத்தை மக்களிடம் திருப்பிக்கொடுக்கவும் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை கிண்டியில் இயங்கும் மத்திய அரசின் திட்ட செயல்பாட்டு பிரிவின் இயக்குனர் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் மீது கடந்த ஆண்டு ஆகஸ்டு 22-ந் தேதி நடந்த விசாரணையின் போது நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பியதோடு அவை தொடர்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்.வி.ரமணா, சஞ்சீவ் கன்னா, கிருஷ்ண முராரி ஆகியோர் அமர்வில் வந்தது. அப்போது இந்த வழக்கில் மேலும் ஒரு இடைக்கால மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும், அதனால் தங்கள் தரப்புக்கு சிறிது கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்து உத்தரவு பிறப்பித்தனர்.


Next Story