"சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது" - நித்யானந்தா கலகல பேச்சு
சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது என்று நித்யானந்தா ஆன்லைனில் கலகலப்பாக பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தா பெங்களூருவை அடுத்த பிடதியை தலைமையிடமாக கொண்டு பரமஹம்ச நித்யானந்த தியான பீடம் என்ற பெயரில் ஆசிரமத்தை நிறுவி நடத்தி வருகிறார். இதன் கிளைகள் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகின்றன.
நித்தியானந்தா மீதும் அவர் நடத்தி வந்த ஆசிரமம் மீதும் குழந்தைகள் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஆசிரமத்திற்கு நன்கொடை வசூல் செய்ய குழந்தைகளை துன்புறுத்தியது போன்ற பல குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, புகார்களின் அடிப்படையில் அகமதாபாத் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார் நித்யானந்தா. குஜராத்தில் அவரது ஆசிரமும் கூட சீல் வைத்து மூடப்பட்டது.
இந்தநிலையில் சர்ச்சை, சலசலப்பு என எதுக்கும் அஞ்சாமல் சத்சங்கம் என்ற ஒன்றில் மட்டுமே தன் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார் நித்யானந்தா.
சரியாக 7 மணிக்கு Kailaasa.org என்ற வலைதள பக்கத்தில் ஆஜராகும் நித்யானந்தா இதுநாள் வரை தியான வகுப்புகளில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நிலையில், இப்போது தன்னை விமர்சிப்பவர்களை பற்றியும் பேசி கலகலப்பூட்டி வருகிறார்.
இத்தனை சர்ச்சைகளுக்கும் மத்தியில் தான் இதுபோல் கூலாக இருக்க காரணம் என்ன என்றும் அவர் விளக்குகிறார்.
என்னை எல்லாம் யாரும் எப்போதும் பயமுறுத்த முடியாது என நேரடியாக சவால் விடும் நித்யானந்தா, தான் யார் என்பது குறித்தும் கலகலப்பாக பேசியிருக்கிறார். சாமியார்களுக்கு மானம், அவமானம் இருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நித்யானந்தா மீதான புகார்கள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் அவர் இணையதளத்தை பக்கத்தை பார்வையிடுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து, இதையும் தன் பாணியிலேயே பாயிண்ட் வைத்து பேசியிருக்கிறார் .
கைலாசா என்ற நாட்டிற்கு அடித்தளம் போட்டுக் கொண்டிருக்கும் நித்யானந்தா, பாஸ்போர்ட், அமைச்சரவை என ஒரு பக்கம் அதகளம் பண்ணிக் கொண்டிருந்தாலும் மற்றொரு பக்கம் ஆன்லைனில் மணிக்கணக்கில் பேசி அசத்தி வருகிறார்.
எல்லாம் ஓகே... ஆனால் தான் எங்கே இருக்கிறேன் என்ற ஒரு கேள்விக்கு அவர் பதில் தருவாரா? என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
Related Tags :
Next Story