அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் - ஆரன்முளாவில் இருந்து 23-ந் தேதி புறப்படுகிறது


அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் - ஆரன்முளாவில் இருந்து 23-ந் தேதி புறப்படுகிறது
x
தினத்தந்தி 4 Dec 2019 7:45 PM GMT (Updated: 4 Dec 2019 7:45 PM GMT)

மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளாவில் இருந்து 23-ந் தேதி புறப்படுகிறது.

பத்தனம்திட்டை,

மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. சபரிமலை அய்யப்பன் கோவிலில் இந்த ஆண்டின் மண்டல பூஜை வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

திருவிதாங்கூர் மன்னராக இருந்த சித்திரை திருநாள் மகாராஜா சபரிமலைக்கு வழங்கிய 420 பவுன் எடையுள்ள தங்க அங்கி மண்டல பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிப்பது வழக்கம்.

இந்த தங்க அங்கி பத்தனம்திட்டை மாவட்டம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த தங்க அங்கி, அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து வருகிற 23-ந் தேதி ஊர்வலமாக சபரிமலை சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து காலை 7 மணிக்கு ஊர்வலம் புறப்படும். இரவு ஓமல்லூரிலும், 24-ந் தேதி இரவு கோண்ணியிலும், 25-ந் தேதி இரவு பெரிநாட்டிலும் தங்கி இருந்து ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி, 26-ந் தேதி மதியம் பம்பை கணபதி கோவில் வந்து சேரும். அங்கிருந்து பக்தர்களின் தலைச்சுமையாக தங்க அங்கி சன்னிதானத்திற்கு கொண்டு செல்லப்படும்.

அன்றைய தினம் மாலை 5.30 மணிக்கு சன்னிதானத்திற்கு வந்து சேரும் தங்க அங்கிக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படும். பின்னர் 18-ம் படிக்கு கீழ் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு மற்றும் மேல்சாந்தி சுதீர் நம்பூதிரி ஆகியோரிடம் தங்க அங்கி ஒப்படைக்கப்படும்.

இதைத்தொடர்ந்து 18-ம் படி வழியாக கொண்டு செல்லப்படும் தங்க அங்கி அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும். தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். பின்னர் நடைபெறும் வழக்கமான பூஜைகளுடன் இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும்.


Next Story