கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் : 66.25 சதவீத வாக்குகள் பதிவு


கர்நாடக சட்டப்பேரவை இடைத்தேர்தல் : 66.25 சதவீத வாக்குகள் பதிவு
x
தினத்தந்தி 5 Dec 2019 3:37 PM GMT (Updated: 5 Dec 2019 3:37 PM GMT)

கர்நாடக சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெற்றது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் குமாரசாமி தலைமையில் நடைபெற்று வந்த காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில், 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர். இதனால் 14 மாதங்களே நீடித்த குமாரசாமி அரசு கவிழ்ந்தது. அரசுக்கு எதிராக செயல்பட்டதால் அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தகுதிநீக்கம் செய்யப்பட்டனர். இதனால் கர்நாடக சட்டசபையில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

இந்த நிலையில் கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்தபடி  இன்று இடைத்தேர்தல்  நடைபெற்றது.  சிறுசிறு சலசலப்புகளை தவிர பெரும்பாலும் அமைதியான முறையிலேயே வாக்குப்பதிவு நடைபெற்றது. 

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் 66.25  சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தற்போது நடைபெற்று வரும் பாஜக தலைமையிலான எடியூரப்பா அரசு கவிழாமல் இருக்க வேண்டுமானால், குறைந்த பட்சம் 6 தொகுதிகளிலாவது அக்கட்சி வெற்றி பெற வேண்டியது கட்டாயம் ஆகும்.  இன்று பதிவான வாக்குகள் வரும் 9 ஆம் தேதி எண்ணப்படுகின்றன.

Next Story