கற்பழிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த சம்பவம்: எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை முடங்கியது
உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் பணிகள் முடங்கின.
புதுடெல்லி,
உத்தரபிரதேசத்தில் கற்பழிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் பணிகள் முடங்கின.
ஆபத்தான நிலையில் சிகிச்சை
உத்தரபிரதேசத்தின் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவரை கடந்த மார்ச் மாதம் ஒரு கும்பல் கற்பழித்தது. இதில் 5 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், நேற்று காலையில் அந்த இளம்பெண்ணை வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளிக்கு இழுத்து சென்ற ஒரு கும்பல், பின்னர் அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது. இதில் 90 சதவீத காயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பெண் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தன்னை கற்பழித்தவர்களே, தங்கள் நண்பர்களுடன் வந்து தீ வைத்ததாக போலீசாரிடம் அந்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
அவை ஒத்திவைப்பு
இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய-மாநில அரசுகள் மீது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன.
கற்பழிக்கப்பட்ட பெண் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நேற்று நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. மாநிலங்களவையில் காலையில் இந்த பிரச்சினையை எழுப்பிய காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். ஆனால் இதற்கு அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அனுமதி மறுத்தார்.
இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை அமைதி காக்குமாறு அவைத்தலைவர் கேட்டுக்கொண்டார். ஆனால் உறுப்பினர்கள் இதற்கு செவிசாய்க்காததால் அவையை 12 மணி வரை வெங்கையா நாயுடு ஒத்திவைத்தார்.
வரிவிதிப்பு திருத்த மசோதா
இதைப்போல பிற்பகல் 2 மணிக்கு அவை கூடிய போதும், இந்த பிரச்சினையை காங்கிரஸ் உறுப்பினர்கள் அவையில் எழுப்பினர். அப்போது பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆனந்த் சர்மா, உன்னாவ் சம்பவத்தை விவாதிக்கக்கோரும் எதிர்க்கட்சியினரின் விருப்பத்தையாவது கேளுங்கள் என அவை துணைத்தலைவர் ஹரிவன்சை கேட்டுக்கொண்டார்.
ஆனால் இதற்கு ஹரிவன்ஷ் மறுப்பு தெரிவிக்கவே, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ½ மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.
பின்னர் மீண்டும் அவை கூடியபோது வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா மீது விவாதம் நடந்தது. பின்னர் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.
Related Tags :
Next Story