உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு


உன்னாவ் விவகாரம் - காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் இருந்து வெளிநடப்பு
x
தினத்தந்தி 6 Dec 2019 8:09 AM GMT (Updated: 6 Dec 2019 8:09 AM GMT)

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதைக் கண்டித்து மக்களவையில் இருந்து காங்கிரஸ் எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த இளம்பெண், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி என்ற 2 பேர் கடத்திச் சென்று இந்த பாதக செயலில் ஈடுபட்டனர். இருப்பினும், கடந்த மார்ச் மாதம்தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணைக்காக, நேற்று காலை, இளம்பெண் தனது வீட்டில் இருந்து கோர்ட்டுக்கு புறப்பட்டார்.

கோர்ட்டுக்கு செல்லும் வழியில், சிவம் திரிபாதி, சுபம் திரிபாதி உள்பட 5 பேர் அவரை வழிமறித்து அப்பெண்ணை  தீ வைத்து எரித்தனர்.  90 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு போராடி வரும் அப்பெண், மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அப்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பெண் மீது தீ வைத்த  5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

உன்னாவ் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இவ்விவகாரம் இன்று பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.  மக்களவையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசும்போது, பாஜக அரசை கடுமையாக சாடினார்.  ‘ஒருபுறம் ராமர் கோவில் கட்டுகிறார்கள், மறுபுறம் சீதாவை எரிக்கிறார்கள். எங்கே செல்கிறது நாடு? பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் எரிக்கப்பட்டதில் அவர் 95 சதவீத தீக்காயம் அடைந்துள்ளார்’ என கூறினார். தொடர்ந்து பாஜக அரசை குற்றம்சாட்டி முழக்கங்கள் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி.க்கள், சிறிது நேரத்தில் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

Next Story