ஐதராபாத் 4 பேர் என்கவுண்ட்டர்: நீதியா? அநீதியா? ஆதரவும்... எதிர்ப்பும்...


ஐதராபாத் 4 பேர் என்கவுண்ட்டர்: நீதியா? அநீதியா? ஆதரவும்... எதிர்ப்பும்...
x
தினத்தந்தி 6 Dec 2019 5:19 PM IST (Updated: 6 Dec 2019 6:55 PM IST)
t-max-icont-min-icon

நான்கு பேர் என்கவுண்ட்டர் செய்யப்பட்டது குறித்து நாட்டு மக்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கையில் நீதியா? அநீதியா? என்று ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து உள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள சம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி   26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார் 

அந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கவேண்டுமென நாடாளுமன்றத்தில்  எம்பிக்கள் குரல் கொடுத்தனர்.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க  வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும், மாணவர்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணி நடத்தினர்.

இந்த கொடூர சம்பவத்தில்  சிவா,சென்ன கேசவலு, முகமது பாஷா, நவீன் ஆகிய நான்கு பேரையும் சம்பவம் நிகழ்ந்த 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர். இந்த குற்ற வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றம் அமைத்திருந்தது.

கைது செய்யப்பட்ட 4 பேரையும் 7 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை குற்றம் நடைபெற்ற இடத்தில் விசாரணை நடத்த போலீசார் நான்கு பேரையும் அழைத்துச் சென்றனர்.

தேசிய நெடுஞ்சாலை 44 ல் காவல்துறையினர் வாகனத்தில் அழைத்துச் சென்ற போது காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

நவம்பர் 27: தெலுங்கானா மாநிலம் சம்சாபாத் நரசய்யாபள்ளி பகுதியை சேர்ந்த  பெண் மருத்துவர் மாலை வீட்டிலிருந்து மருத்துவமனைக்கு புறப்பட்டுள்ளார்.

 அன்று 9.22 மணிக்கு தமது சகோதரியை செல்போனில் அழைத்த பெண் மருத்துவர், தமது இருசக்கர வாகனம் பஞ்சர் ஆகிவிட்டதாகவும், தமக்கு 4 பேர் உதவி செய்வதாக கூறி உள்ளதாகவும் , அவர்களை பார்த்தால் அச்சமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  10.20 மணிக்கு மருத்துவருக்கு அவரது சகோதரி செல்போனில் அழைப்பு விடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

நவம்பர் 28: இரவாகியும் மருத்துவர் வீடு திரும்பாததால், நள்ளிரவு 1 மணியளவில் தங்களது மகளை காணவில்லை என பெற்றோர் புகார் அளித்துள்ளனர். பாலத்தின் கீழ் சடலம் ஒன்று எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

 விசாரணையில் அது காணாமல் போன பெண் மருத்துவர் என்பதும் அவர் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. நாடு முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 நவம்பர் 30: சிசிடிவி கேமரா பதிவுகள் அடிப்படையில் போலீசார் 25 வயது மதிக்கத்தக்க 4 பேரை கைது செய்தனர். திட்டமிட்டு மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்றது தெரியவந்தது.

 குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

 தெலுங்கானா கவர்னர் தமிழிசை, மருத்துவரின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியபோது, அவரிடம் மருத்துவரின் தாய் கதறி அழுதார்.

 டிசம்பர் 1: இது தொடர்பாக சிறப்பு நீதிமன்றம் அமைத்து விசாரிக்க தெலுங்கானா அரசு உத்தரவிட்டது.

 டிசம்பர் 2: நாடாளுமன்றத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவம் குறித்து பலர் ஆவேசமாக பேசினர்

 டிசம்பர் 6: சம்பவம் எப்படி நடந்தது என்ற விவரங்களை தெரிந்து கொள்வதற்காக, குற்றவாளிகளை போலீசார் மருத்துவர் கொல்லப்பட்ட பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது குற்றவாளிகள் 4 பேரும் தப்பி ஓட முயற்சித்ததால், அவர்களை பிடிப்பதற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 4பேரும் உயிரிழந்தனர்.

குற்றவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானாவில் மக்கள் முக்கியமாக பெண்கள் இதனை கொண்டாடி வருகின்றனர்.

என்கவுண்ட்டர் நடந்த இடத்தில் கூடியிருந்த உள்ளூர்வாசிகள், 'போலீஸ் வாழ்க ' "டி.சி.பி வாழ்க , ஏ.சி.பி வாழ்க" என கோஷங்களை எழுப்பினர். சிலர் ரோஜா இதழ்களை மழையாக பொழிந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

என்கவுண்ட்டர் பற்றிய செய்தி வெளியான நிலையில், தெலுங்கானா காவல்துறையையும் மாநிலத்தையும் புகழ்ந்து வாழ்த்துக்கள் மற்றும் கொண்டாட்ட ட்வீட்களின் வெள்ளத்தில்  சமூக ஊடகங்கள் மூழ்கின.

#JusticeForDisha  என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகத் தொடங்கியது. (திஷா என்பது பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்பட்ட பெயர்) 

இந்த நிலையில்தான் தேசிய மனித உரிமைகள் ஆணையம், மீடியா செய்திகள் அடிப்படையில் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து உள்ளது. மேலும் உண்மை கண்டறியும் குழுவை என்கவுண்ட்டர் நடந்த இடத்திற்கு அனுப்பி வைக்க மனித உரிமைகள் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

இதனிடையே ஐதராபாத் என்கவுண்ட்டர் தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கருத்து தெரிவித்துள்ளார். பலாத்கார குற்றவாளிகளுக்கு கருணை காட்டத் தேவையில்லை. இதுபோன்ற பலாத்கார சம்பவங்கள் மொத்த நாட்டையும் உலுக்குகிறது என்று தெரிவித்துள்ளார்.

கொல்லப்பட்ட பெண்ணின் தந்தை 'தனது மகளின் ஆத்மா இப்போது நிம்மதியாக இருக்கும்' என்று கூறி உள்ளார்.

ஆனால் இது உண்மையில் நீதியா? குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஒருபோதும் நியாயமான விசாரணையை சந்திக்கவில்லை. குற்றவாளி என நிரூபிக்கப்படும் வரை ஒருவர் நிரபராதி என்று சட்டம் கூறுகிறது, அதை நிரூபிக்க அவர்களுக்கு வாய்ப்பு எங்கே? ஐதராபாத் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நான்கு பேரும் உண்மையான குற்றவாளிகளா? 

 நான்கு பேரும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவுகளைச் சேர்ந்தவர்கள், அங்கு அவர்கள் கொல்லப்படுவது சர்ச்சையைத் ஏற்படுத்தி உள்ளது என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

ஆனால் அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை பாலின நீதி ஆர்வலர்கள் வரை அனைவரும் இந்த சம்பவத்தால் நீதி வழங்கப்பட்டதாக கொண்டாடி வருகின்றனர்.

பாஜக தலைவர் கபில் மிஸ்ரா, கற்பழிப்பாளர்களைக் கையாள்வதற்கான "சரியான" வழி இது என்றும், மற்ற மாநிலங்கள் அவர்களிடமிருந்து  கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

பிரபல நடிகர் ரிஷிகபூர் தெலுங்கானா போலீஸை வாழ்த்தி உள்ளார்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் சில முக்கிய விளையாட்டு வீரர்கள் இதனை வரவேற்று உள்ளனர்.


பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி டெல்லி,உத்தரபிரதேச அரசுகள் தெலுங்கானா போலீசாரிடம் இருந்து பாடம் கற்க வேண்டும் என கூறி உள்ளார்.

திமுக எம்பி கனிமொழி கூறியதாவது;-

4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது, பலருக்கு மகிழ்ச்சி தரும் வேளையில், நியாயம் கிடைக்கும் உணர்வை தருகிறது. அதேவேளையில், என்கவுண்ட்டர்தான் இதற்கு தீர்வா? என்றும் கேள்வி எழுகிறது என கூறி உள்ளார்.

காங்கிரசை சேர்ந்த விஜயதாரணி கூறும் போது,

பெண்களுக்கு ஆதரவாக இறைவனே வழங்கிய தீர்ப்பாக கருதுகிறேன், சரியான நடவடிக்கைக்கு எனது பாராட்டுக்கள்! என கூறி உள்ளார்.

"என்கவுண்ட்டரில் 4 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டது வரவேற்கத்தக்கது" என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறி உள்ளார்.

ஐதராபாத் லோக்சட்டாவைச் சேர்ந்த சேர்ந்த அரசியல்வாதி ஜெயபிரகாஷ் நாராயண்,

"இத்தகைய கொடூரமான குற்றங்களைச் செய்பவர்கள் மிகக் கடுமையான தண்டனைக்குத் தகுதியானவர்கள், ஆனால் ஒரு நீதிமன்றத்தில் விரைவாக உரிய செயல்முறையால் நிரூபிக்க முடியாமல் காவல்துறையினர் தாங்கமுடியாத அழுத்தத்தின் கீழ் இருந்தனர்; நீதித்துறைக்கு புறம்பான கொலைகள் காலப்போக்கில் அப்பாவி மக்களையும் பலி கொடுக்கும்.

விசாரணை, தடயவியல், போலீஸ் திறன், வழக்கு, நீதித்துறை நடைமுறை, சோதனைகள். பலவீனமான, பயனற்ற, தன்னிச்சையான / தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட விதி முழு சமூகத்திற்கும் ஆபத்தை விளைவிக்கும். மாநிலத்தின் முதல் பணி விரைவானது மற்றும் திறமையான நீதி ஆகும் என கூறி உள்ளார்.

காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சஷி தரூர் நீதித்துறைக்கு புறம்பான கொலைகள் ஏற்கத்தக்கவை அல்ல என தனது ட்விட்டில் தெரிவித்து உள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் கூறுகையில், ஐதராபாத் கால்நடை மருத்துவர் பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் என்கவுண்ட்டர் செயயப்பட்டது குறித்து நாட்டு மக்கள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இது,  அவர்கள் நீதி அமைப்பு மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்பதும் கவலை அளிக்கிறது.

"இது கவலைப்பட வேண்டிய ஒன்று, குற்றவியல் நீதி முறைமை மீதான மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும். குற்றவியல் நீதி முறையை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து அனைத்து அரசாங்கங்களும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.

மேனகா காந்தி கூறியதாவது:-

“ஐதராபாத்தில் என்ன நடந்து இருந்தாலும் அது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. நீங்கள் விரும்புவதால் மக்களைக் கொல்ல முடியாது. நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்டவர் தூக்கிலிடப்பட்டிருப்பார், நீங்கள் சட்டத்தை உங்கள் கைகளில் எடுக்க முடியாது. துப்பாக்கியின் மூலம் நீதி வழங்கப்படுமானால், இந்த நாட்டில் நீதிமன்றங்கள் மற்றும் காவல்துறையின் தேவை என்ன? என கேள்வி எழுப்பி உள்ளார்.

Next Story