2024-ம் ஆண்டுக்குள் குழாய் இணைப்போடு 55 லிட்டர் குடிநீர் - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்


2024-ம் ஆண்டுக்குள் குழாய் இணைப்போடு 55 லிட்டர் குடிநீர் - டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில்
x
தினத்தந்தி 6 Dec 2019 9:26 PM GMT (Updated: 6 Dec 2019 9:26 PM GMT)

2024-ம் ஆண்டுக்குள் குழாய் இணைப்போடு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும் என, டி.ஆர்.பாலு எம்.பி. கேள்விக்கு, மத்திய மந்திரி பதில் அளித்தார்.

புதுடெல்லி,

தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி., நாடாளுமன்றத்தில், 12-வது ஐந்தாண்டு திட்டத்தில் கூறியதுபோன்று அனைத்து ஊரக பகுதிகள், பள்ளிக்கூடங்கள், அங்கன்வாடிகளுக்கு கடந்த 2017-ம் ஆண்டுக்குள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டதா?, ஊரகப்பகுதிகளில் வசிக்கும் மக்கள்தொகையில் 50 சதவீதம் பேருக்காவது தினமும் ஒரு நபருக்கு 55 லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து நீர் ஆதாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் செகாவத் கூறும்போது, “கடந்த ஆண்டு மார்ச் மாத நிலவரப்படி மொத்தம் உள்ள 17.25 லட்சம் ஊரக குடியிருப்பு பகுதிகளில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடிகள் உள்ளிட்ட 13.61 லட்சம் குடியிருப்பு பகுதிகளில் ஒருவருக்கு தலா 40 லிட்டர் தண்ணீர் வழங்கும் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் சுமார் 3 லட்சம் ஊரக பகுதிகளில் பகுதியளவில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 64,743 ஊரகப்பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருக்கிறது. ‘ஜல் ஜீவன்’ திட்டத்தின்படி ஒவ்வொரு ஊரகப்பகுதி குடியிருப்புக்கும் 2024-ம் ஆண்டுக்குள் குழாய் இணைப்போடு 55 லிட்டர் குடிநீர் வழங்கப்படும்” என்றார்.

Next Story