போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரின் 2-வது ‘என்கவுண்ட்டர்’


போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரின் 2-வது ‘என்கவுண்ட்டர்’
x
தினத்தந்தி 7 Dec 2019 4:00 AM IST (Updated: 7 Dec 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

போலீஸ் கமிஷனர் சஜ்ஜனாரின் 2-வது ‘என்கவுண்ட்டர்’ இதுவாகும். முன்னதாக இவர் 2008-ம் ஆண்டு மாணவிகள் மீது திராவகம் வீசியவர்களை சுட்டுக்கொன்றவர் ஆவார்.

ஐதராபாத்,

ஐதராபாத்தில் பெண் டாக்டரை கற்பழித்து கொன்ற 4 பேரை சுட்டு வீழ்த்திய சைபராபாத் போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படையினருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்து உள்ளனர்.

சஜ்ஜனார் ‘என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்’ என பெயர் பெற்றவர். இவர் 2008-ம் ஆண்டு வாரங்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த போது வாரங்கல் நகரில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவிகள் இருவர் மீது திராவகம் (ஆசிட்) வீசப்பட்டது. அந்த மாணவிகளில் ஒருவரை வாலிபர் ஒருவர் காதலித்ததாகவும், ஆனால் அவரது காதலை அந்த மாணவி ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் தனது கூட்டாளிகள் இருவருடன் வந்து, அந்த மாணவி சக மாணவியுடன் சென்ற போது திராவகம் வீசிவிட்டு தப்பி ஓடி விட்டார்.

இந்த சம்பவம் நடந்த 48 மணி நேரத்தில் மாணவிகள் மீது திராவகம் வீசியதாக சீனிவாஸ் ராவ் (வயது 25), பி.ஹரிகிருஷ்ணா, பி.சஞ்சய் (22) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அந்த சம்பவம் பற்றி நடித்துக்காட்டுவதற்காக போலீஸ் கமிஷனர் சஜ்ஜனார் தலைமையிலான போலீஸ் படையினர், 3 பேரையும் திராவகம் வீச்சு நடந்த இடத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அந்த நபர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றனர். இதைத்தொடர்ந்து போலீசார் பாதுகாப்புக்காக துப்பாக்கியால் சுட்டதில் 3 வாலிபர்களும் பலி ஆனார்கள்.

அதேபோன்று தான் இப்போது சைபராபாத்திலும் என்கவுண்ட்டர் மூலம் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர். இது சஜ்ஜனாருக்கு 2-வது ‘என்கவுண்ட்டர்’ ஆகும்.

முதல் ‘என்கவுண்ட்டர்’ சம்பவம் நடந்த போது வாரங்கல் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்று இருந்தது. அப்போது ஆந்திர முதல்-மந்திரியாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். மாநில பிரிவினைக்கு பிறகு இப்போது வாரங்கல் மாவட்டம் தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது.


Next Story