பெண் டாக்டரை கற்பழித்து கொன்றவர்கள் சுட்டுக்கொலை: தெலுங்கானா போலீசாருக்கு நடிகர்-நடிகைகள் பாராட்டு


பெண் டாக்டரை கற்பழித்து கொன்றவர்கள் சுட்டுக்கொலை: தெலுங்கானா போலீசாருக்கு நடிகர்-நடிகைகள் பாராட்டு
x
தினத்தந்தி 6 Dec 2019 10:45 PM GMT (Updated: 6 Dec 2019 10:09 PM GMT)

ஐதராபாத் அருகே பெண் டாக்டரை கற்பழித்து கொலை செய்தவர் களை சுட்டுக்கொன்ற தெலுங்கானா போலீசாருக்கு திரையுலகினர் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

நகரி,

ஐதராபாத்தின் புறநகர் பகுதியான சம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை பெண் டாக்டர் ஒருவர் சமீபத்தில் கற்பழித்து, எரித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை கைது செய்த போலீசார், பெண் டாக்டர் கொலை செய்யப்பட்ட இடத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை செய்வதற்காக நேற்று அதிகாலையில் அழைத்து சென்றனர். அப்போது அவர்கள் போலீசாரை தாக்கி விட்டு தப்பிக்க முயன்றதால், 4 பேரையும் போலீசார் சுட்டுக்கொன்றனர்.

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவத்துக்கு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர். அந்தவகையில் திரையுலகினரும் தெலுங்கானா போலீசாரை பாராட்டி உள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-

நடிகை குஷ்பு: பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்பவர்களுக்கு தகுந்த தண்டனை கொடுக்கப்படுவதில்லை. இதற்கு உதாரணமாக நிர்பயா வழக்கை குறிப்பிடலாம். அவரை கற்பழித்து கொன்ற குற்றவாளிகளில் ஒருவன் சிறுவன் என்பதற்காக அவனுக்கு தண்டனை தரப்படவில்லை. மற்றவர்களுக்கு சிறையில் 3 வேளை சாப்பாடு வழங்கப்படுகிறது. சென்னையில் 10-வயது சிறுமியை கற்பழித்து கொன்ற என்ஜினீயர் ஒருவர் 3 மாதங்களில் ஜெயிலில் இருந்து வெளியே வந்து பெற்ற தாயையே கொன்றுவிட்டார்.

எனவே பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் குற்றவாளிகளுக்கு சட்ட ரீதியாக கடும் தண்டனை கொடுக்கப்பட வேண்டும். அந்தவகையில் தெலுங்கானாவில் நடைபெற்றுள்ள என்கவுண்ட்டர் சம்பவம் நிச்சயமாக எல்லா தாய்மார்களுக்கும் நிம்மதியை தரும். ஒரு தாயாக நானும் இதை பாராட்டுகிறேன்.

நடிகை நந்திதா சுவேதா: பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது பெண்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு நாட்டில் வாழ்வதற்காக வெட்கப்படுகிறேன். தெலுங்கானாவில் நடந்த என்கவுண்ட்டர் சம்பவத்தை பாராட்டுகிறேன். சம்பவம் எந்த இடத்தில் நடைபெறுகிறதோ, அதே இடத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

நடிகர் விஷால்: இறுதியில் நீதி காப்பாற்றப்பட்டு இருக்கிறது. தெலுங் கானா போலீசாருக்கு எனது உண்மையான நன்றிகள்.

விவேக்: தங்கையின் ஆன்மா இனி சாந்தியடையும். வக்கிர எண்ணம் கொண்டவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும். போலீஸ் அதிகாரிகளுக்கு மிகப்பெரிய வணக்கங்கள்.

நாகார்ஜூனா: ஒவ்வொரு நாளும் காலையில் செய்தி சேனல்கள் மற்றும் செய்தித்தாள்களை பார்க்கும்போது ஏதாவது ஒரு இடத்தில் பெண்கள், குழந்தைகள் கற்பழிப்பு சம்பவங்களை கேட்கிறோம், பார்க்கிறோம். ஆனால் இன்று (நேற்று) காலையில், பெண் டாக்டர் கொலையாளிகள் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் ஆன்மா சாந்தியடையும்.

ஜூனியர் என்.டி.ஆர்.: சம்பவம் நடந்த எட்டே நாட்களில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைத்திருக்கிறது. இனி அந்த இளம்பெண்ணின் ஆன்மா சாந்தியடைந்து இறைவனை சேரும்.

அல்லு அர்ஜூன்: கொல்லப்பட்ட இளம்பெண்ணை திரும்ப கொண்டுவர முடியாவிட்டாலும், அவரது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்துக்கு ஓரளவுக்கேனும் நீதி கிடைத்ததாகவுமே இந்த என்கவுண்ட்டரை பார்க்க வேண்டும்.


நடிகை சார்மி: இன்றுதான் பெண்களுக்கு உண்மையான தீபாவளி. கற்பழிப்பு போன்ற பாதக செயல்களில் ஈடுபடும்போது குற்றவாளிகளுக்கு அவர்களின் தாய், சகோதரி, மனைவி போன்ற யாரும் நினைவுக்கு வருவதில்லை. ஆனால் இன்று நடந்த என்கவுண்ட்டர் மூலம் நிச்சயம் அவர்களுக்கு போலீசார் நினைவுக்கு வருவார் கள். போலீசாருக்கு பாராட்டுகள். முதல்-மந்திரி சந்திரசேகர்ராவுக்கும் வாழ்த்துகள்.

ரகுல் பிரீத் சிங்: இதுதான் சரியான தீர்வு. கோர்ட்டு, வழக்கு என காலம் தாழ்த்தி குற்றத்தின் தீவிரத்தை மறந்துவிட்ட பிறகு தண்டனை வழங்குவதைவிட இதுதான் சிறந்தது.

சமந்தா:
பெண்களின் பயத்துக்கு இந்த என்கவுண்ட்டர் மூலம் சரியான தீர்வு கிடைத்துள்ளது.

குற்றவாளிகளுக்கு பயத்தையும், பெண்களுக்கு தைரியத்தையும் ஏற்படுத்த இதுதான் சரி.


Next Story